Skip to main content

சந்தேகப்பட்ட காதலன்; விட்டுக் கொடுக்காத காதலி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 12

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

 Detective Malathi's Investigation: 12

 

தான் சந்தித்த அதிர்ச்சியான ஒரு வழக்கு குறித்து நம்மிடம் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி பகிர்ந்து கொள்கிறார்.

 

வெளியூருக்கு தன் பெண்ணைப் படிப்பதற்காக அனுப்பிய பெற்றோர், அந்தப் பெண் குறித்து விசாரித்துச் சொல்லுமாறு நம்மிடம் வந்தனர். அந்தப் பெண் ஒருவரோடு நெருக்கமாக இருந்து வருவது தெரிந்தது. திடீரென்று ஒருநாள் அந்தப் பையன் சட்டையை எல்லாம் கழற்றிவிட்டு அந்தப் பெண்ணை ரோட்டில் இழுத்துச் செல்வதாகத் தகவல் வந்தது. நாங்கள் சென்று பார்த்தபோது காட்டுமிராண்டித்தனமாக அந்தப் பெண்ணை அவன் இழுத்துச் சென்றான். கேள்வி கேட்பவர்களை அடிக்கச் சென்றான். அவனை நான் பின் தொடர்ந்தேன். காவல்நிலையத்துக்கு ஃபோன் செய்தேன். 

 

மஃப்டியில் போலீசார் வந்தனர். எஸ்ஐ கேள்வி கேட்டபோது அவர் மீதும் அவன் கை வைத்தான். அவர் விட்ட அறையில் கீழே விழுந்தான். தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றான். போலீஸ் ஸ்டேஷனுக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். நாங்களும் உடன் சென்றோம். அங்கு அந்தப் பெண்ணிடம் நான் பேசினேன். தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், இன்னொரு பையனோடு தான் பேசுவதும், பழகுவதும் தன் காதலனுக்குப் பிடிக்கவில்லை என்றும் அவள் கூறினாள். அதன் காரணமாகவே அவன் தன்னை அடித்து ரோட்டில் இழுத்து வந்ததாகவும் கூறினாள். 

 

இவ்வளவு நடந்தும் தன் காதலனோடு செல்லவே அந்தப் பெண் விரும்பினாள். அவளின் முடிவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. நடந்த அனைத்தையும் குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் நாம் ரிப்போர்ட் கொடுத்தோம். மற்ற மாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்வது என்பது சவாலான காரியம் தான். அப்படியான சூழ்நிலையில் ஏற்கனவே அங்கு இருக்கும் துப்பறியும் நிறுவனங்களை நாம் அணுகுவோம். எங்களுக்கு மிகவும் சவாலாக அமைந்த இடம் பம்பாய் தான். அங்கு சென்று துப்பறிய மொழிப் பிரச்சனை, பழக்க வழக்கங்கள், உணவு ஆகியவை எங்களுக்கு சவாலாக இருந்தது. எல்லாவற்றையும் சமாளித்து தான் இந்த துறையில் இவ்வளவு வருடங்களாக நீடித்து வருகிறோம்.

 

 

Next Story

குடும்பச் சுமை தாங்காமல் இல்லத்தரசி எடுத்த அதிர்ச்சி முடிவு - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 44

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Detective malathis investigation 44

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகளும் அப்பாவும் அம்மாவை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

ஒரு வித்தியாசமான வழக்கு இது. ஒரு அப்பாவும் பெண்ணும் என்னை சந்திக்க வருகிறார்கள். அம்மா தங்களை விட்டு சென்று விட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பெண், அம்மாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அவர் ஒரு ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும், இனிமே வரமாட்டார் என்று சொன்னதாகவும் சொன்னார்.

நான் அந்தப் பெண்ணிடமும், அப்பாவிடமும் சில கேள்விகள் கேட்டு அம்மாவின் குணம், வீட்டின் நிலைமை, அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இருக்கும் உறவுமுறை என்று பிரச்சினைக்கான காரணிகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு அறிகிறேன். ஆனால், எல்லாவிதமான கேள்விகளுக்கும் ஒன்றுமே இல்லை என்றும் தன் அம்மா ரொம்ப அமைதியானவர், குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றும் சொல்கின்றனர். அந்த அம்மாவிற்கும் பேரன், பேத்திகள் எடுத்து இரண்டு வயது ஆனதும் வளர்த்து தன் கடமைகளை முடித்து விட்டுதான்  திடீரென்று ஆசிரமத்திற்கு சென்று இருக்கிறார்.

ஆனால், இப்பொழுது மீண்டும் வர சொல்லி கூப்பிட்டாலும் வருவதில்லை என்று அவர் வராததற்கு காரணம் கண்டுபிடித்து கொடுக்குமாறு கேட்டார்கள். ஒருவேளை அம்மாவிற்கு வேறு எதுவும் தொடர்பு இருந்தது என்றால் ஆசிரமத்தில் இருக்க மாட்டார்கள் அல்லது ஆசிரமத்தில் அவருக்கு தெரிந்தவர் இருக்கலாம் என்று கூட யூகித்தோம். இருந்தாலும் எதுவும் புரியவில்லை. சரி என்று நாங்கள் இந்த வழக்கை எடுத்து கொண்டு ஆசிரமம் சென்று அந்த அம்மாவின் நடவடிக்கையை கண்காணித்தோம். ஆசிரமம் என்பதால் சுலபமாக எங்களால் உள்ளே செல்ல முடிந்தது. ஆனால், அவரை கவனித்த வரை ஒரு குறையும் சொல்லும்படி இல்லை. மிக சாதாரணமாக குடும்பத்தை விட்டு வந்து விட்டோம் என்ற குற்ற உணர்வு கூட அவரிடம் இல்லை.

பொதுவாக ஒரு வழக்கை நாங்கள் முடிக்க முப்பது நாட்கள் எடுத்து கொண்டு ரிப்போர்ட்டை கொடுத்து விடுவோம். ஆனால், இது காரணம் கண்டுபிடிக்க முடியாததால் ஒரு மாதம் தாண்டியது. வெளியே வேறு ஏதும் தொடர்பு இல்லை என்பதால் யாரையும் பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்களால் அவரது கணவரையும் பெண்ணையும் மட்டுமே மீண்டும் கூப்பிட்டு விசாரிக்க முடிந்தது. கேட்டதில் தன் அம்மா குடும்பத்தில் நிறைய கவனம் கொண்டு குடும்பத்திற்கு ஏற்ப வேளாவேளை விதவிதமாக சமைத்துக் கொடுத்து அன்பாகத்தான் பார்த்துக் கொண்டார்கள் என்று இருவருமே கூறினர். எனவே, மேலும் இதற்கு மேல் வெளியே தேடி ஒரு பலனும் இல்லை என்று அவரிடமே ஆசிரமத்தில் சென்று விசாரிப்பது என்று முடிவு எடுத்து அனுமதி வாங்கிக்கொண்டு அந்த அம்மாவை சந்தித்தேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். ஆனால், அவரிடம் எந்தவித சலனமும் இல்லை. அதற்குப் பின் மெதுவாக அவரிடம் குடும்பம் என்று இருக்கும் பொழுது  எதற்காக தனிமையைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டவுடன் மெல்ல அவர் பேச ஆரம்பித்தார். என்னால் முடியவில்லை மேடம். என்னால் இனி அவருடன் வாழ முடியாது என்று சொன்னார். அவரது குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்று எந்த ஒரு காரணம் சொன்னார்களோ அதே காரணத்தை மனைவி தனக்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது என்றார். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் யோசித்து விதவிதமாக தினசரி சமைத்துப்போட்டு, தன்னை பற்றி யோசிக்க முடியாமல் அவர் வெறுமையை உணர்ந்திருக்கிறார்.

தன்னுடைய கணவர் எந்த ஒரு உதவியும் செய்வதும் இல்லை மேலும் இப்படித்தான் உணவு இருக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு.. நான் பெற்றெடுத்ததோ பெண் குழந்தை. அதை ஒரு இடத்தில் கட்டிக் கொடுக்கும் வரை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு நாள் சகித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது என் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு தனக்கு என்று நேரம் வேண்டுமென்று உணர்ந்து இங்கே வந்திருக்கிறேன் என்று சொன்னார். இப்பொழுது தான் தனக்கு விடுதலை கிடைத்திருக்கிறது நிம்மதியாக இருக்கிறேன் என்று ஆத்மார்த்தமாக சொன்னார். அவர் பேசியவுடன் அவர் எப்படிப்பட்ட மன வேதனையுடன் இத்தனைக் காலம் வாழ்ந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்ததாக அந்தப் பெண்ணை கூப்பிட்டு அழைத்து விஷயத்தை சொன்னேன். அந்த அம்மாவின் மனநிலையும் எடுத்து சொன்னேன். அந்தப் பெண்ணும் இதையெல்லாம் எங்க அம்மா எங்களிடமே நேரடியாக சொல்லி இருக்கலாமே என்றார். சொல்லியிருந்தாலும் நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. முதலில் பிரச்சனை யாரிடம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி உன் அப்பாவிடம் தான் முதலில் நீ எடுத்து சொல்ல வேண்டும். எனவே இருவரையும் சேர்த்து வைக்கும் வழியை பார் என்று ரிப்போர்ட்டை கொடுத்து  அனுப்பினேன்.

ஒரு குடும்பத்தைப் பேணி பராமரிக்கும் பெண்ணை குடும்பத் ‘தலைவி’ என்று உயர்ந்த அங்கீகாரம் கொடுத்து அவர்களை வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை தலைவியாகவோ குறைந்தது அவர்களுக்கென்று ஒரு உணர்வும்  தனிப்பட்ட தேவை, ஆசை என்று இருக்கும் என்று பெரும்பாலும் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் பொருட்படுத்துவதில்லை. இப்படியே சென்றால் ஆசிரமங்கள் அநாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்களுக்கு என்று இல்லாமல் இப்படி அநாதையாகவும், ஆதரவற்றோர் வரிசையிலும் குடும்ப தலைவிகள் போய்ச் சேர்வதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.