சமுதாயம் எவ்வளவு முன்னேறினாலும் டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்தாலும் பாதிக்கப்படும் சமுதாயமாக பெண் சமுதாயம் தான் இருக்கிறது. அந்த வகையில், தான் சந்தித்த பெண்கள் அதிகம் குறிவைக்கப்பட்ட வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளரான மாலதி விவரிக்கிறார்.
மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுத்த ஒரு பெண்ணை ஒரு பையன் தொடர்புகொண்டான். சில காலம் பேசிப் பழகிய பிறகு நேரில் சந்தித்தனர். இருவரும் அடுத்தடுத்த நிலைகளைக் கடந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவளை விட்டு அவன் விலக ஆரம்பித்தான். இதனால் அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டனர். அவனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றி அனைத்தும் தெரியும். ஆனால், இவளுக்கு அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. முட்டாள்தனமாக அவனோடு பழகியிருக்கிறாள்.
அவளைத் தொடர்ந்து அவனுக்கு மெயில் அனுப்பச் சொன்னோம். ஒருகட்டத்தில் அவன் வெளியே வந்தான். அவள் இருக்கும் இடத்திற்கு வந்து ரூம் போட்டு அவளை அழைத்துச் சென்றான். நாங்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோம். சுற்றி இருக்கும் அனைத்து இடங்களிலும் ஆள் வைத்து கண்காணித்தோம். அன்று முழுவதும் அவன் கால்டாக்சியிலேயே தான் சுற்றினான். அவனுடைய காரை கண்டுபிடித்தோம். அவன் பின்னணியை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தனர்.
சில நாட்களில் இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள். காவல்துறையினர் எங்களையும் விசாரித்தனர். நாங்கள் நடந்த அனைத்தையும் கூறினோம். அவனுடைய இருப்பிடம் குறித்து நாங்கள் தகவல் தெரிவித்தோம். காவல்துறையினர் அவனை கைது செய்தனர். அவன் ஆன்லைனில் இதே வேலையாகத்தான் இருந்திருக்கிறான் என்பது அதன் பிறகு போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
டேட்டிங் என்றால் என்ன என்பது குறித்த சரியான புரிதல் நம்முடைய இளைஞர்களுக்கு இல்லை. வெளிநாடுகளில் உறவுமுறையை உறுதி செய்து திருமணம் வரை கொண்டு செல்வதற்கே டேட்டிங் பயன்படுகிறது. இங்கு அதற்கான அர்த்தமே வேறு.
வெளிநாட்டினர் நம்முடைய கலாச்சாரத்தை இப்போது பின்பற்றி வாழ்கின்றனர். நம் இளைஞர்கள் தவறான பழக்கங்களையே கலாச்சாரம் என்று கருதுகின்றனர். ஒரு வழக்கில் சரியான துப்புகள் கிடைத்தால் மட்டும்தான் அதை நாங்கள் எடுத்துக்கொள்வோம். துப்புகளே இல்லாத வழக்குகளை நாங்கள் எடுப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திலிருந்து நான் வரவில்லை என்றால் போலீசாரோடு எங்கள் டீம் உள்ளே வந்துவிடும். அனைத்தையுமே ப்ளான் செய்துவிட்டு தான் உள்ளே செல்வோம்.