Skip to main content

அன்று ஜாதிப்பெயரை சொல்லி அழைத்தார்கள்; இன்று ஸ்டைலிஸ்ட் என்கிறார்கள்... இமேஜை மாற்றிய சி.கே.குமரவேல் | வென்றோர் சொல் #38

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

ck kumaravel

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தின் அழகை ஒருபடி உயர்த்திக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது சிகையலங்காரம். சங்ககாலந்தொட்டு இன்றைய டிஜிட்டல் காலம்வரை ஆண், பெண் என இருபாலருமே சிகையலங்காரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றனர். உடல் அலங்காரம் மற்றும் ஆடை அலங்காரம் குறித்த எண்ணம் இல்லாதவர்கள்கூட சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்தத் தவறுவதில்லை. ஆனால், தனிமனிதனின் புறத்தோற்ற அழகைத் தீர்மானிக்கக்கூடியவற்றில் ஒன்றாக இருக்கும் முடி மற்றும் கூந்தல் அலங்காரத் தொழிலோ, இந்தியச் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறைச் சிக்கலுக்கு இரையாகியிருந்தது. குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே அந்தத் தொழிலைச் செய்யவேண்டுமென வகைப்படுத்தப்பட்டு, அது அவர்களின் குலத்தொழிலாகவும் மாற்றப்பட்டிருந்தது. அந்தச் சமூகத்தினருக்குக் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட ஊர் பொதுநிகழ்வுகளில் முதல்மரியாதை அளிக்கப்பட்டாலும் திருவிழா அல்லாத மற்றநாட்களில் அவர்களது வாழ்க்கை சாதிய ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு இருந்ததை மறுக்கமுடியாது.

 

காலப்போக்கில் நிகழ்ந்த அறிவியல் வளர்ச்சி மற்றும் நவீனமயம், பல தொழில்களில் நிலவிய இத்தகைய சாதியக்கட்டமைப்பை அடியோடு வேரறுத்தது. அந்த வகையில், முடி திருத்தம் மற்றும் சிகை அலங்காரம் தொழிலில் நிலவிய சாதியக் கட்டமைப்பை நவீனமயத்தின் துணையோடு வேரறுத்துள்ளார், சி.கே.குமரவேல். சிகை அலங்கார முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக 600க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கும் இவரது நேச்சுரல்ஸ் நிறுவனம், இத்தொழிலுக்கே இன்று புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

 

சின்னி கிருஷ்ணன் மற்றும் ஹேமலதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சி.கே.குமரவேல். கடலூரைப் பூர்வீகமாக கொண்ட சி.கே.குமரவேலுக்கு மொத்தம் ஐந்து உடன்பிறந்தவர்கள். தந்தை பார்மா பொருட்களை மொத்தமாக வாங்கி சிறுசிறு பாக்கெட்டுகளில் அடைத்து மருந்தகங்களில் விற்பனை செய்யும் தொழில் நடத்திவந்தார். பள்ளிப்படிப்பை கடலூரில் முடித்த சி.கே.குமரவேல், ஊட்டச்சத்துப் பிரிவில் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் பட்டம் பெறுகிறார். கல்லூரி படிப்பிற்குப் பிறகு, தன்னுடைய அண்ணன்களோடு இணைந்து அவர்கள் நடத்திவந்த தொழிலில் சிறிது காலம் ஒத்தாசையாக இருந்தார். ஒருகட்டத்தில் தனியாக தொழில்தொடங்கவேண்டும் என முடிவெடுத்து, ராகா என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். ராகா சீகைக்காய், ராகா சோப், ராகா எண்ணெய் என முதல் மூன்று தயாரிப்புகளும் வரிசையாகத் தோல்வியைத் தழுவுகின்றன. நான்காவதாக வெளியான ராகா தயாரிப்பு வெற்றியடைகிறது.

 

அந்த வெற்றியைக் கொண்டாட ஆரம்பிப்பதற்கு முன்னரே தயாரிப்பு முறையில் ஏதோ குறைபாடு இருக்கிறது எனப் புகார்கள் எழ ஆரம்பித்தன. இறுதியில் நான்காவது தயாரிப்பும் தோல்வியைத் தழுவுகிறது. அதிலிருந்து மெல்ல மீண்டுவந்த சி.கே.குமரவேல், பின்னாட்களில் நேச்சுரல்ஸ் என்ற நவீனமான சிகை அலங்காரகம் தொடங்குகிறார். கடந்தகாலத் தோல்விகளில் இருந்து கற்ற பாடத்தின் துணையுடன் மெல்ல காலடி எடுத்துவைக்க ஆரம்பித்த சி.கே.குமரவேல், இன்று 600க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் அதிபதியாக உயர்ந்து நிற்கிறார்.

 

naturals

 

"கல்லூரி முடித்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் வாழ்க்கை தொடங்குகிறது என்று உறுதியாக நான் நம்புகிறேன். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பாடங்களையும் கல்லூரிக் காலத்திற்குப் பிறகே நாம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். என் வாழ்க்கையில் கல்லூரிக்கட்டத்தை நிறைவுசெய்த பிறகு, என்னுடைய இரு அண்ணன்களுடைய தொழிலிலும் சிறிதுகாலம் ஒத்தாசையாக இருந்தேன். அந்த நேரத்தில் எனக்குத் தோன்றும் எண்ணங்களைத் தொழில்ரீதியான ஆலோசனைகளாக அவர்களுக்குக் கூறுவேன். அவர்கள் நான் கூறிய ஆலோசனைகளை நிராகரிப்பதற்குப் பதில், வயதில் சிறியவன் நீ என்று கூறி என்னையே நிராகரித்துவிடுவார்கள். இது எனக்கு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது. ஒரு கட்டத்தில் நாம் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து ராகா என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

 

வரிசையாக மூன்று தோல்விகள். நான்காவது தயாரிப்பு வெற்றி பெற்றுவிட்டது என்று நினைத்த வேளையில், தயாரிப்பு கோளாறு காரணமாக மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அதுவரை தோல்விகளின்போது பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத எனக்கு இந்தத் தோல்வி மிகுந்த பயத்தைக் கொடுத்தது. மகாபாரதத்தில் அபிமன்யூவைப் பிரச்சனைகள் சூழ்ந்ததைப்போல என்னைச் சுற்றி பல பிரச்சனைகள் இருந்தன. என்னுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நெருக்க ஆரம்பித்துவிட்டனர். என்னுடைய நலம்விரும்பிகள் அனைவரும் நான் தோற்றுவிட்டதாகக் கூறினார்கள். மன அமைதிக்காக சபரிமலை, திருப்பதி என மாறிமாறி சென்றுகொண்டிருந்தேன். அடுத்து என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியாமல் இருந்த நேரத்தில், இன்னவேட்டிவ் சீக்ரட்ஸ் ஆஃப் சக்ஸஸ் (Innovative Secrets Of  Success) என்ற புத்தகத்தை ஒரு புத்தகக்கடையில் பார்க்க நேர்ந்தது. என்னுடைய நல்ல நேரம் அது புத்தகமாக இல்லாமல் ஆடியோ கேசட்டாக இருந்தது. அதை முழுவதுமாகக் கேட்ட பின்பு என்னுடைய வாழ்க்கையே மாறியது.

 

கடந்தகால வலிகளில் இருந்து மெல்ல மீண்டுவந்த நான், இன்று 685 சலூன்கள் உள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைபார்க்கும் ஒரு மிகப்பெரிய பிராண்டையும் 400க்கும் மேற்பட்ட பெண் தொழிலதிபர்களையும் உருவாக்கியுள்ளேன்". இவ்வாறு சி.கே.குமரவேல் சாதித்திருப்பது தொழில்ரீதியான வெற்றி மட்டுமல்ல. முடி திருத்தும் தொழில் செய்பவர்களுக்கான சமூக மரியாதையையே பெற்றுத்தந்துள்ளார். ஒரு காலத்தில் முடி திருத்துபவர்கள் சாதி அடையாளத்துடன் அழைக்கப்பட்டது மாறி இன்று மரியாதையுடன் ‘ஸ்டைலிஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த சமூக மாற்றத்தில் சி.கே.குமரவேலின் ஐடியாவுக்கும் முக்கிய பங்குண்டு.

 

கடந்தகாலத் தோல்விகளில் இருந்து எவரொருவர் அக்னிப் பறவைபோல மீண்டெழுந்து வருகிறாரோ, அவரையே வெற்றியன்னையின் கரங்கள் அரவணைக்கின்றன. தன்னுடைய தோல்விகளில் இருந்து மீண்டு வந்தது குறித்து ஒரு பேட்டியில் கூறிய சி.கே.குமரவேல், "நான் ராகா நிறுவனம் தொடங்கியபோது முதல் வருடத்தில் 6 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யவேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து உழைத்தேன். அந்த இலக்கை ஓரளவிற்கு நான் நெருங்கிவிட்டாலும், இதுபோன்று அளவு நிர்ணயம் செய்து உழைப்பது எவ்வளவுத் தவறானது எனப் பாடம் படித்துக்கொண்டேன். நேச்சுரல்ஸ் நிறுவனம் தொடங்கியபோது மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டினால் போதும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அளவு சிறியது எனும்போது அதை அடைவதற்கான வழியும் எளிமையாக இருந்தது. இங்கிருந்து டெல்லி நோக்கி பயணம் செய்ய முடிவெடுத்துவிட்டால் டெல்லிவரைக்குமான பாதை நாம் நிற்கும் இடத்திலேயே கண்களுக்கு புலப்பட்டால்தான் பயணத்தைத் தொடங்குவேன் என்று நாம் இருப்பதில்லேயே? கண்ணுக்கெட்டிய தூரம்வரை பயணிக்கிறோம். அந்த இடத்தை அடையும்போது கண்ணுக்கெட்டிய தூரத்தின் எல்லை விரிவடைவதைப்போல, குறுகிய இலக்கை நோக்கிப் பயணித்து, அந்த இடத்தை அடையும்போது இலக்கை விரிவாக்கிக்கொண்டு பயணத்தைத் தொடர வேண்டும். இதுதான் வெற்றியை நோக்கி பயணிப்பதற்கான சரியான மற்றும் எளிமையான வழியாகும்" என்றார். வெற்றிதாகம் கொண்ட அனைவருக்கும் சி.கே.குமரவேலின் இந்த வார்த்தைகள் எனர்ஜி டானிக்தான்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

'ஆச்சி மிளகாய்த்தூள் வாங்கினால் டம்ளர் இலவசம்...' ஆரம்பக்காலத்தில் திருவிழாக்களில் கடைபோட்ட பத்மசிங் ஐசக் | வென்றோர் சொல் #37