பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் நான்காம் பகுதி பின்வருமாறு...
ராணுவ ஆட்சி வருவதற்கு முன்புவரை தமிழை வளர்ப்பதற்கான சூழல் பர்மாவில் நிறையவே இருந்தது. தமிழ்நாட்டில் வெளியாகிற புத்தகங்கள், நாளிதழ்களெல்லாம் அங்கு வரும். ஆனால், ஒருநாள் தாமதமாக வரும். அங்கிருந்த நம் மக்கள் பெரியாரை நேசித்தார்கள். அதே நேரத்தில் தீவிரமாக கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்தார்கள். அண்ணாவுடைய பேச்சும் அங்கிருந்த எங்களிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. பர்மாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் நம் மக்கள் தமிழ் உணர்வோடுதான் இருந்தார்கள்.
அந்தக் காலத்தில் பர்மாவில் கடத்தல் அதிகமாக இருக்கும். போதைப்பொருட்களில் தொடங்கி பவளம் வரை கடத்தல் நடக்கும். எருமை மாட்டினை சுத்தமாக கழுவிவிட்டு அதன் முடிக்காம்புகளில் கஞ்சாவை தடவி, இங்கு கொண்டுவந்து கழுவி எடுத்துக்கொள்வார்கள். எல்லையில் தீவிரவாதம் தலைதூக்கிய பிறகு அதெல்லாம் ஒழிந்துவிட்டது. அங்கு கடத்தலில் ஈடுபட்டவர்கள் நாட்டிற்குள் வந்து வேறு தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். நகை, துணிமணிகள் கடத்தலும் அதிகமாக நடக்கும். நம் நாட்டிலும் அதே விலைதான் இருக்கும் என்றாலும், அங்கிருந்து வரும் தங்கம், துணிகள் தரமாக இருக்கும்.
அங்கு எம்.ஜி.ஆர், ரஞ்சன், ராஜகுமாரி, சிவாஜிக்கு தீவிரமான ரசிகர்கள் இருந்தார்கள். அதிலும் எம்.ஜி.ஆர், தெலுங்கு நடிகர் ரஞ்சனுக்கு பர்மிய மக்களும் ரசிகர்களாக இருந்தார்கள். ஒருமுறை, எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரு நடிகை அங்கு வந்தார். நம் ஆட்கள் அவர் கையைப் பிடித்து இழுத்துவிட்டார்கள். எதுக்கு உன் கணவனை டைவர்ஸ் பண்ண என்று அவரிடம் கேட்டு பெரிய பிரச்சனையே ஆகிவிட்டது. தமிழர்கள் வெளியேற ஆரம்பித்த பிறகு பர்மாவில் விவசாயம் பெரிய அளவில் குறைந்துவிட்டது. ஒருகட்டத்தில், சைனீஸ் மக்கள் அதிகமானது பர்மிய மக்களுக்கு பல வகையில் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இன்றைக்கும் நம் ஆட்கள் கணிசமான அளவில் அங்கு இருக்கிறார்கள். பெரிய அளவில் தொழில் செய்தவர்கள் ஓரளவு பிழைத்துவிட்டனர். சாதாரணமான தொழில் செய்தவர்களும் கூலி வேலை செய்தவர்களும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.