வீட்டில் உள்ள பணத்தை தெரியாமல் எடுக்கும் பழக்கம் கொண்ட சிறுமிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, கொஞ்ச கொஞ்சமாக வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகிறார். இப்படியே இரண்டு வருடமாக சென்ற பின்பு, ரூ.20,000 பணம் வீட்டில் இல்லாமல் போகிறது. தங்க காசு போன்றவற்றையெல்லாம் எடுத்து தான் தான் எடுத்தேன் என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான சில காரணங்களை அந்த சிறுமி சொல்கிறாள். வேலை பார்த்து வரும் அம்மா, இந்த சிறுமியுடன் அதிகம் நேரம் செலவழிக்காமல் அவளை அடிக்கடி நச்சரித்து வந்துள்ளார். அப்பா, கவனக்குறைவால் பணத்தை சரியான இடத்தில் வைக்காமல், இந்த சிறுமிக்கு அதிகம் செல்லம் கொடுத்து வந்துள்ளார்.
சைவ உணவுப் பழக்கம் கொண்ட இந்த குடும்பத்தில் பிறந்த இந்த சிறுமிக்கு, அசைவ உணவுப் பழக்கம் உண்ணும் உண்டாகியிருக்கிறது. இது வீட்டுக்கு தெரிந்ததால், அடிக்கடி சிறுமியை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், அசைவ உணவு உண்ணும் பழக்கத்தை பெற்றோரிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்ச கொஞ்சமாக பணம் எடுக்க ஆரம்பித்து ஆடம்பரமாக செலவு செய்ய ஆரம்பிக்கிறாள். ஃபிரண்ட்ஸ் எல்லோரும் போன் வைத்திருப்பதால், வீட்டில் இருந்த பணத்தை எடுத்து போன் வாங்க ஆசைபட்டிருக்கிறாள். போன் வாங்க வேண்டும் என்று வீட்டில் சொன்னாலும், பெற்றோர் வாங்கி தரமாட்டார்கள் என்று எண்ணி யாருக்கும் தெரியாமல் இந்த பணத்தை எடுத்திருக்கிறாள்.
அவளிடம் விசாரிக்கும் போது, 4,5ஆம் வகுப்பு படிக்கும் போதே யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுக்கும் பழக்கம் இருக்கிறது என்கிறாள். தான் கேட்கும் பொருள்களை பெற்றோர் வாங்கி தராததால், வீட்டில் இருந்து பணத்தை எடுப்பதாக சொல்கிறாள். இதை பற்றி பெற்றோரிடம் சொல்லும்போது அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதை அவளுடைய சிறுவயதிலேயே நிறுத்திருக்க வேண்டும். ஆனால், இந்த சிறுமியினுடைய பெற்றோர் அதை கவனிக்காமல் இருந்துள்ளனர். அவளுக்கு யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று நன்றாக தெரிகிறது. நான் அவளிடம் பேச பேச, எப்படியாவது என்னிடம் பேசி பாக்கெட் மனியாக மாத மாதம் 1,000 ரூபாய்யை பெற்றோர் கொடுக்குமாறு செய்துவிடுங்கள் என்று சொல்கிறாள்.
பணத்தின் மதிப்பு பற்றி அவளுக்கு தெரியவே இல்லை. அதனை அவளுக்கு எடுத்துச் சொன்னேன். பணத் தேவை இருக்கிறது என்றால், அதை பெற்றோரிடம் சொல்ல வேண்டும். இந்த வயதிற்கு 20,000 ரூபாய் அளவிற்கு போன் தேவையில்லை என்று சொன்னேன். அவளிடம் பேசியதை வைத்து, அவளுடைய நண்பர்கள் நல்ல நண்பர்கள் கிடையாது என்று புரிந்தது. மேலும், அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்கள் ஆடம்பரமாக வளர்த்திருக்கிறார்கள். நண்பர்கள் அனைவரும், தினமும் 1000,2000 பாக்கெட் மனியாக கொண்டு வருவதால் தானும் எடுப்பதாக அவள் சொன்னாள். சைவ குடும்பத்தில் பிறந்த மகள், அசைவ உணவு சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவளுக்கு எஜுகேட் செய்யுங்கள் என்று பெற்றோரிடம் அறிவுரை கூறினேன். ஆனால், தனக்கு பிடித்ததை சாப்பிடுவதாக அவள் கூறினாள். அவர்களுடைய கலாச்சாரத்தில் நான் தலையிட முடியாது என்பதால் எஜுகேட் செய்ய மட்டும் சொன்னேன்.
ஆனால், அப்பா அவளை பற்றி கண்டுக்கவே மாட்டிக்கிறார். அம்மா, அவளை நச்சரித்துக் கொண்டே இருக்கிறார். நான் சொல்வதை அவர்கள் கேட்கவே தயாராக இல்லை. அதனால், மகளின் நடவடிக்கை மாற வேண்டுமென்றால் அவளுக்கு டைம் கொடுங்கள் என்று எடுத்துக் கூறினேன். ஆனால், அவர்கள் கேட்கவே தயார் இல்லாததால், அவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். அவளிடம் எடுத்துக் கூறி நிறைய ஆக்ட்டிவிட்டி கொடுத்த பிறகு, பணம் எடுப்பதை நிறுத்தியதாக அவள் கூறினாள். பணம் எடுப்பது மட்டுமல்லாமல், அவளது நடவடிக்கையை நிறைய மாற்ற வேண்டியிருப்பதால் இந்த செக்ஷன் இன்னமும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.