Skip to main content

அங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28

Published on 06/01/2021 | Edited on 10/01/2022

 

AR Rahman

 

ஆஸ்கர் விருது விழா மேடை பரபரப்பாக இருந்தது. அவ்வருட ஆஸ்கர் விருது பெறப்போவது யார் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அங்கே திரண்டிருந்தவர்கள் மத்தியில் நிலவியது. அதில் ஒருவராக, ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் அறிவிக்கப்பட்டதும் பலத்த கைதட்டல். எவ்வித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாக மேடையேறி விருதுபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' எனத் தன்னடக்கத்துடன் பேசிவிட்டுக் கீழே இறங்கினார். ஒரு இந்தியர், தமிழர் ஆஸ்கர் மேடையேறுவது நமக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. அதுவரை விருது வாங்கிவிட்டு கத்திக் கூச்சலிடுதல், மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தல் என அம்மேடையைப் பார்த்துப் பழகிய மேலைநாட்டினருக்கும் அந்த நிகழ்வு புதிய அனுபவமாகவே இருந்தது. சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால் ஆஸ்கர் மேடை சிறுபொழுது ஒட்டுமொத்தமாகவே வேறு வடிவம் கண்டிருந்தது.

 

ஏ.ஆர்.ரஹ்மான் என இன்று அறியப்படும் இந்த இசைப்புயலுக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் திலீப்குமார். தந்தை ஆர்.கே.சேகர் சினிமாவில் பெயர் சொல்லக்கூடிய அளவிலான இசைக்கலைஞர். இதனால், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறு வயதிலேயே இசை பரிட்சயமானது. ரஹ்மானுக்கு காலைப்பொழுதுகள் பள்ளியில் என்றால், மாலைப் பொழுதுகள் தந்தையின் இசை அரங்கில்தான். தந்தையோடு இணைந்து இசைக்கருவிகள் வாசிப்பது, அதை முறையாகப் பராமரிப்பது ஆகியவைதான் அவரது வேலை. வாட்டி வதைக்கக் கூடிய அளவில் வறுமை இல்லாவிட்டாலும், செல்வங்கொழிக்கும் நிலைமையும் குடும்பத்தினுள் நிலவவில்லை. இந்த நிலையில், ரஹ்மானுக்கு 9 வயது இருக்கும்போது அவரது தந்தை எதிர்பாராத விதமாக மரணமடைகிறார். அப்பாவின் மரணம் ரஹ்மானை மட்டுமின்றி ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் வெகுவாகப் பாதித்தது. தந்தையின் பொறுப்பும் ரஹ்மானின் தலையில் ஏறி உட்கார, ஒரு கட்டத்தில் பள்ளிப்படிப்பையும் பாதியில் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வயதில் தாங்கக்கூடிய அளவிற்கும் மேலான பொறுப்புகளைச் சுமந்து, கடின மற்றும் துல்லிய உழைப்பினால் பின்னாட்களில் பெரும் புயலாக இசை உலகைத் தாக்கியது இந்தத் தென்றல்.

 

AR Rahman

 

"எனக்கு 6 வயதாக இருக்கும்போது என் அப்பாவுடன் இணைந்து அவர் ஸ்டூடியோவிற்குச் செல்வேன். அங்கே உள்ள ஹார்மோனியம் பெட்டியை எடுத்து வாசிப்பேன். அப்போது அங்கே இருந்தவர்கள் இவன் பெரிய இசையமைப்பாளராக வருவான் எனக் கூறுவார்கள். என் அப்பாவும் சிரிப்பார். பின் எனக்கு 9 வயது இருக்கும் போது அப்பா மரணமடைந்துவிட்டார். அப்பாவின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலமாகத்தான் அம்மா குடும்பத்தை நடத்திவந்தார். அப்பா செய்த வேலையை நீயும் செய்யவேண்டும் என என் அம்மா கேட்டுக்கொண்டதால்தான் தொடந்து இசை சார்ந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். எனக்கு சிறுவயதிலேயே கணினி மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தத் துறையில் போகவேண்டும் என்றுதான் விரும்பினேன். குடும்பச் சூழலை கருத்தில் கொண்ட என் அம்மா, "உனக்கு இசை தெரியுமே... அது மூலமாகவே நீ சம்பாதிக்கலாம்" என்றார். இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் என் அம்மாதான் காரணம்".

 

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பே ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக் கலைஞராகப் பின்வரிசையில் பணியாற்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதில், இளையராஜா உடன் பணியாற்றியதும் அடக்கம். பொதுவாக 'படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்' என்பது நம்மிடம் புழக்கத்தில் உள்ள ஒரு கருத்துருவாக்கம். இக்கருத்துருவாக்கத்தினுள் கனகச்சிதமாகப் பொருந்துகிறார் ரஹ்மான். பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக நிறைவு செய்யாவிட்டாலும் இசை மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்து ரஹ்மானுக்கு இருக்கும் அறிவுடன், இத்துறையில் பட்டம் பெற்றவர்களே போட்டியிட முடியாது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அவருக்குள் இருக்கும் தேடல் அலாதியானது. பழங்காலத்து இசைக்கருவிகள் தொடங்கி இன்றைய இசைக்கருவிகள் வரை அத்தனையும் ரஹ்மானுக்கு அத்துப்பிடி. சந்தையில் எந்த நவீனத் தொழில்நுட்பம் வந்தாலும் அது ரஹ்மானின் பார்வைக்கோ அறிவிற்கோ எட்டாமல் தப்புவதில்லை. இதை ரஹ்மான் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். 'பழக்கம்தான் பின்னாட்களில் வழக்கமாகும்' என்பதும் தமிழ்ச் சமூகத்தில் உள்ள மற்றொரு கருத்துருவாக்கம். இதற்குள்ளும் ரஹ்மான் கனகச்சிதமாகப் பொருந்துகிறார். இளையராஜாவுடன் பணியாற்றிய போதே கணினி இசையை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றினார் ரஹ்மான். தமிழ் சினிமாவில் கணினி இசை பயன்படுத்தப்பட்ட முதல் படமான 'புன்னகை மன்னன்' படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் அதில் பின்னிருந்து பணியாற்றியதில் ரஹ்மானின் பங்கு பெரியது. 

 

பின் 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் இசை வடிவம் மற்றும் ரசிகர்களின் ரசனையை மொத்தமாக மாற்றினார். முதல் படத்திலேயே தேடிவந்தது 'தேசிய விருது'. அதன் பிறகு இந்திய சினிமா, ஹாலிவுட் சினிமா எனத் தன்னுடைய கால் தடத்தை அகலப் பதித்தார். திரையுலகு உயரிய விருதாகக் கருதும் 'கோல்டன் குளோப்ஸ்', 'கிராமி விருது', 'ஆஸ்கர்' உட்பட அனைத்து விருதுகளையும் வென்று அசத்தினார்.

 

இவையனைத்தையும் தாண்டி, ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப்பற்றும் பாராட்டிற்குரியதே. பொதுவாக ஆரம்பக்காலங்களில் தமிழ், தமிழர் என்று பேசி தன்னை வளர்த்துக்கொள்ளும் திரைக்கலைஞர்கள், கணிசமான வளர்ச்சியை எட்டியபின் அதை வெளிப்படுத்தமாட்டார்கள். "நம்ம தமிழ்ப்பாடல் கிராமி விருதுகள் வெல்லும் அளவிற்கு வரணும்... அது பத்தோடு பதினொன்னா இருக்கக் கூடாது.. அதுதான் முதல் இடத்தில் வரணும்" எனத் தன்னுடைய முதல் பேட்டியிலேயே கூறிய ரஹ்மான், சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம், இன்றும் தனது தமிழ் உணர்வை வெளிப்படுத்தி வருகிறார். 2009-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்றதற்காக, அவருக்கு ஒரு பாராட்டுவிழா தமிழ்த்திரையுலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வை ரத்து செய்யும்படி ரஹ்மான் கூறிவிட்டார். பின்னர் ஒரு பேட்டியில் அது குறித்துப்பேசிய ரஹ்மான், "பக்கத்து நாட்டுல நம்ம மக்கள் போரில் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஆஸ்கர் விருது வாங்கியதைக் கொண்டாடணுமா என நினைத்தேன்" எனக் கூறி ஒட்டுமொத்த தமிழுணர்வாளர்களின் மனங்களையும் வென்றார்.

 

cnc

 

குடும்ப வறுமை, சிறு வயதிலேயே தந்தை மரணம், பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமை உட்பட பல இன்னல்களை எதிர்கொண்டாலும் கனவினை நோக்கிய அவரது தொடர் உழைப்பே, ஏ.ஆர்.ரஹ்மானை இன்று உலகப் புகழின் உச்சத்தில் நிறுத்தியுள்ளது.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

வெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27