Skip to main content

குழந்தையை கடத்திய தந்தை; மதத்தால் ஏற்பட்ட பிரிவு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:97

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
advocate-santhakumaris-valakku-en-97

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி பார்ப்போம்.  

கிளாரா என்ற பெண்ணுடைய வழக்கு இது. அந்த பெண் தனது குழந்தையை தன்னுடைய கணவரே கடத்திவிட்டுச் சென்றாக அழுதபடி என்னிடம் வந்தார். என்ன நடந்தது என்று விசாரிக்கையில் பள்ளிக்கு தனது குழந்தையை விட்டு விட்டு வந்ததாகவும் பள்ளி முடிந்து குழந்தையை அழைத்து வரச் சென்றபோது 10 நிமிடத்திற்கு முன்பாக தன் கணவர் குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டார், எப்படியாவது குழந்தையை அவரிடமிருந்து மீட்டுத் தாருங்கள் என்று கேட்டாள். அதோடு தன் கணவர் தன்னுடன் வாழவில்லை என்பதையும் தெரிவித்தாள். பின்பு அந்த பெண் சொன்னதை வைத்து நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தோம். 

அந்த மனுவிற்கு பதிலளித்த கிளாராவின் கணவர் சுதீப், தன் மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள், இவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். நான் முஸ்லீம் மதமாக இருந்ததால் கிளாராவை மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. திருமணம் முடிந்து இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தோம். அதன் பின்பு எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிறிஸ்தவ பெயரை வைத்தோம். அதைத் தொடர்ந்து கிளாரா, குழந்தை சென்னையிலுள்ள பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டாள். ஏனென்றாள் நாங்கள்  இருந்தது ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் கிளாரா குழந்தைதையை கிறிஸ்தவ பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூறினாள். இருவரும் ஒன்றாக முடிவெடுத்து சென்னையிலுள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் குழந்தையை சேர்த்தோம். நான் வேலைக்காக எனது சொந்த ஊரான கேரளாவிலுள்ள கொச்சிக்கு போவதும் வருவதுமாக இருந்தேன். 

இதற்கிடையில் கிளாரா, அடிக்கடி தனது தந்தை உடன் கிறிஸ்தவ மதச் சடங்குகளைப் பற்றி பேசி வந்திருக்கிறாள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவ மதச் சடங்குளை தீவிரமாக பின்பற்றியும் வந்திருக்கிறாள். இதனால் சில நேரங்களில் வேறு மதத்தினரை திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கிளாராவுக்கு வந்துள்ளது. இதை என்னிடம் அவள் கூறியபோது, எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்று அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்று கூறினேன். ஆனால் கிளாரா முழுவதுமாக கிறிஸ்தவ மதத்தினை முழுவதுமாக பின்பற்றி குழந்தையை சர்ச்சுக்கு அழைத்துச் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய் என்று கூறியிருக்கிறாள். அது பிடிக்கவில்லை என்று குழந்தை என்னிடம் கூறியது. அதனால் கிளாராவிடம் குழந்தையை மதச் சடங்குகளை பின்பற்றச் சொல்லி வற்புறுத்த வேண்டாம் என்று கூறினேன். அது கிளாராவுக்கு சுத்தமாக பிடிக்காததால் அவள் என்னிடம் மனைவியாக வாழவில்லை. பாசமாக அருகில் நெருங்கினால் கூட விலகிச் சென்று விட்டாள் என் குழந்தைக்கு என்னுடன் தான் இருக்க பிடித்திருக்கிறது என்று அந்த ஆட்கொணர்வு மனுவிற்கு நீதிமன்றத்தில் பதிலளித்திருந்தார். 

அதே போல் கிளாரா, தனக்கு மத சடங்குகள் முக்கியம். இருந்தாலும் குழந்தையும் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறினாள். ஆனால் அந்த குழந்தை தந்தையிடம்தான் நன்றாக பழகியது. தனது அம்மாவிடம் செல்ல மறுத்து நீதிமன்றத்திலேயே அடம்பிடித்தது. இருந்தாலும் நீதிபதி, கிளாராவையும் சுதீப்பையும் மீடியேசனுக்கு அனுப்பினார். அங்கு சென்றாலும் மதம்தான் பெரிய் பிரச்சனையாக கிளாராவுக்கு இருந்தது. மீடியேசன் காலத்திலும் குழந்தை அம்மாவிடம் செல்லாமல் கொச்சியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு போக விரும்பியது. இதனால் நீதிமன்றம், ஆட்கொணர்வு மனு அளித்தால் தற்போது குழந்தையை சுதீப் அழைத்து வந்து காண்பித்து விட்டார். குழந்தை வேண்டுமென்று கிளாரா நினைத்தால் தி கார்டியன்ஸ் அண்ட் வார்ட்ஸ் பிரிவில் வழக்கு தொடரட்டும் என்று நீதிபதி கூறினார். அதே போல் வழக்கு தொடர்ந்த பிறகு சனி மற்றும் ஞாயிறு மட்டும் கிளாராவுடன் குழந்தையை இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்ற நாட்கள் அந்த குழந்தை கொச்சியில் தனது அப்பா சுதீப்புடனும் பாட்டியுடனும் இருக்க உத்தரவிட்டது. சில வாரங்கள் சென்ற பிறகு குழந்தை தன்னிடம் இருக்க விரும்பவில்லை என்ன செய்வது என்று கிளாரா என்னிடம் கேட்டாள். அதற்கு நான் குழந்தையின் வளர்ச்சிதான் முக்கியம் நீயும் உன் கணவர் வீட்டிற்கு போ என்று சொன்னதற்கு தனது மதத்தை காரணம் காட்டி அங்கு செல்ல மறுப்பு தெரிவித்தாள். அதன் பிறகு நீதிமன்றம் குழந்தையை சுதீப்பின் கஸ்டடியில் வளர்க்க உத்தரவிட்டது. அந்த உத்தரவிற்கேற்ப குழந்தையை வளர்க்க சுதீப் செய்த செலவுகளுக்கான ரெக்கார்டு அனைத்தையும் அவர் வைத்திருந்தார். கடைசியில் கிளாரவும் சுதீப்பும் ஒருமனதாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர். கிளாரா தரப்பில் நான் நீதிமன்றத்தில் வாதாடினாலும் குழந்தையின் வளர்ச்சிதான் எனக்கு முக்கியமானதாக பட்டது. அதனால் குழந்தையை சுதீப்புடனேயே இருக்க நானும் அனுமதித்தேன்.