குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
உத்ரா எனும் 18 வயது பெண்ணுடைய வழக்கு இது. தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்த இவருக்கு, பொதுவான மனிதர் மூலம் ஒரு வரன் வந்திருக்கிறது. பையன், ஸ்கூல் காலேஜிற்கு புக் சப்ளை செய்யும் வேலை பார்த்து மாத வருமானமாக 30,000 ரூபாய் சம்பாரிப்பான் என்று பையன் வீட்டில் சொல்கிறார்கள். பெண்ணுடைய அப்பாவும், பையனை பற்றி விசாரிக்க பையன் வீட்டிற்கு சென்று பார்த்தால், வீடு முழுவதும் சிதலமடைந்து சின்ன வீடாக இருக்கிறது. இதனால், பெண்ணுடைய அம்மாவுக்கு இது பிடிக்காமல் போகிறது. இருப்பினும், பெண்ணையும் பையனையும் தனிக்குடித்தனம் அனுப்பி வைப்போம் என்று பையன் வீட்டில் உறுதியாக கூறியதன் பேரில், பெண் வீட்டிலும் இந்த திருமணத்திற்கு சம்மதித்து திருமண ஏற்பாடு செய்கிறார்கள். பத்திரிகை கொடுக்கும்போது, பையன் வேறு இடத்தில் வேலை பார்ப்பதாக பெண்ணுடைய அப்பாவுக்கு அறசல்புறசலாக தெரிகிறது. இருப்பினும், அது உண்மையாக இருக்காது என்று நினைத்து, பெண் சம்பாரித்த பணத்தை சேர்த்து வைத்த 10 பவுன் நகைகளை பெண்ணுக்கும், 1 பிரேஸ்லெட், 1 வாட்ச், 1 மோதிரம் பையனுக்கு போட்டு இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
திருமணம் நடந்த பின்பு, பையன் பேசும் பேச்சு, நடவடிக்கைகள் மீது எல்லாம் பெண்ணுக்கு சந்தேகம் வர ஆரம்பிக்கிறது. அதனால், பெண் வீட்டில் அன்று நடக்கவிருந்த முதலிரவையும் ஏதோ ஒன்றை அவனிடம் சொல்லி அதை தள்ளி வைக்கிறாள். அடுத்த நாள், பையன் வேறு இடத்தில் வேலை பார்ப்பதாக சொன்ன நபரிடம், பெண் போன் போட்டு விசாரிக்கிறாள். அங்கு எந்த தகவலும் கிடைக்காததால், தன்னுடைய வீட்டில் இருந்துகொண்டு, பையனுடைய போட்டோவை, தன்னுடன் வேலை பார்க்கும் நபரிடம் கொடுத்து பையனை பற்றி விசாரிக்குமாறு கேட்கிறாள். இதற்கிடையில், பையனும் அவனுடைய வீட்டிற்கு சென்றுவிடுகிறான். பையனை பற்றி விசாரிக்கையில், பையன் காலையில் பேப்பர் போடும் வேலை செய்வதாக தெரிய வருகிறது. பொய் சொல்லி நம்மை ஏமாற்றி இந்த திருமணத்தை நடத்திவிட்டான் என்ற அதிர்ச்சியில் இருந்த இந்த பெண், தன் பக்கத்திலே பையனை விடவில்லை.
பையனுடைய சின்ன வீட்டில், படுக்க கூட வசதி இல்லாத காரணத்தினால், வேறு வீடு ஒன்றை பார்த்தால் அங்கு வந்து தங்குவதாகக் கூறிவிட்டு இந்த பெண் தன்னுடைய வீட்டில் இருக்கிறாள். அவன் அவனுடைய வீட்டில் இருந்து கொண்டு அடிக்கடி, பெண் வீட்டுக்கு வருவதும் போவதுமாய் இருக்கின்றான். தாம்பத்தியத்துக்கு அவன் அழைத்தாலும், இவள் அதற்கு சம்மதிக்கவே மாட்டிக்கிறாள். இப்படியே நாட்கள் செல்ல, ஒருநாள் தனக்கு கடன் இருப்பதால் கடனை அடைக்க மனைவியிடம் இருந்த நகைகளை கேட்கிறான். ஆனால், அவள் தான் சம்பாரித்த நகைகளை கொடுக்க மறுத்துவிடுகிறாள். இதனையடுத்து, உத்ரா வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சென்று அவளை மரியாதை இல்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்கிறான். இதில் மனமுடைந்த உத்ரா, தனது அப்பாவிடம் நடந்த சம்பங்களை எல்லாம் கூறி,என்னை பார்த்து விஷயத்தை கூறினாள்.
திருமணம் நடந்து 3 மாதங்கள் கூட ஆகாததால், டைவர்ஸ் போட முடியாது என்றேன். தனக்கு டைவர்ஸ் வேண்டும் என்று உத்ரா உறுதியாக இருந்தாள். அதன் பிறகு, நான் சொன்னதன் பேரில், நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறி, பொய் சொல்லி திருமணத்தை நடத்தி நகைகளை கேட்பதாக பெண்ணுடைய அப்பா, பையன் மீது போலீசில் புகார் கொடுக்கிறார். அந்த பையனை, போலீஸ் கடுமையாக விசாரித்ததன் பேரில், தான் பேப்பர் போடும் வேலை பார்ப்பதாக அவன் ஒப்புக்கொண்டான். மேலும், பெண் வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என அவனை கடுமையாக கண்டித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவனை விட்டு பிரிந்து தனக்கு டைவர்ஸ் வேண்டும் என்று உத்ரா உறுதியாக இருந்தாள். 1 வருடம் முடிந்தால் மட்டுமே டைவர்ஸுக்கு அப்ளை செய்ய முடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இந்த சட்டத்தை தாண்டி, இந்து திருமணச் சட்டம் 14(1) பிரிவின்படி, உயிருக்கு ஆபத்தான நிலை இருந்தாலோ அல்லது மிக போசமாக கொடும் விளைவு ஏற்படும் நிலை இருந்தாலோ அதன் காரணமாக 1 வருடத்திற்கு முன்பாகவே, கோர்ட்டில் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி டைவர்ஸுக்கு அப்ளை செய்யலாம் என்று சொல்கிறது.
அந்த பிரிவின்படி, டைவர்ஸுக்கு மனுத்தாக்கல் செய்தேன். அதன் பிறகு, நடந்த கவுன்சிலிங்கில், தன்னுடன் சேர்ந்து மனைவி வாழ வேண்டும் என்று அந்த பையன் அழுகிறான். ஆனால், உத்ரா தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால், கவுன்சிலிங் பெயிலியர் ஆகிவிட்டது. பையன் குறைவாக சம்பளம் வாங்கியிருப்பதால், அதிக சம்பளம் வாங்கும் பெண்ணிடம் அவன் மெயிண்டெனன்ஸ் கேட்கும் சிக்கலும் இந்த கேஸில் இருந்தது. இருப்பினும், அவர்களை மீடியேசனுக்கு அனுப்பினோம். அங்கு, உத்ரா டைவர்ஸ் வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். ஆனாள், திருமணத்திற்கு அதிக செலவு செய்திருப்பதால் தனக்கு மெயிண்டெனன்ஸ் கொடுக்க வேண்டும் என்று பையன் கூறுகிறான். பொய் சொல்லி திருமணத்தை நடத்தியிருப்பதால் பையன் மீதே கேஸ் போடுவோம் என்று அவனிடம் எடுத்துச் சொன்னேன். இதற்கிடையில், பையனுக்கு போட்ட நகைகளை பெண் வீட்டார் கேட்டார்கள். ஆனால், அந்த நகைகள் தற்போது தன்னிடம் இல்லை, அதனால் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டான். அதன் பிறகு, உத்ராவிற்கு எடுத்து கூறியதன் பேரில் அவளும் அந்த நகைகளும், சீர்களையும் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டாள். டைவர்ஸ் கொடுக்கவில்லை என்றால், பொய் சொல்லி திருமணம் நடத்தியதற்காக பையன் மீது கேஸ் கொடுப்பேன் என்று கூறியதன் பேரில், அவன் அதற்கு ஒப்புகொண்டு மீடியேசனில் கையெழுத்து போட்டான். அதன் பிறகு, அவரவர் பொருட்கள் அவர்களுக்கே என்றும், அவனுக்கு போட்ட நகைகள் அவனே வைத்துக்கொள்ளட்டும் என்பதன் பேரில் இருவரும் பிரிய மனம் ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு, இந்து திருமண சட்டத்தின்படி, 6 மாதங்கள் கழித்து இருவருக்கும் டைவர்ஸ் கிடைத்தது.