குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
சந்தியா என்று பெண்ணுடைய வழக்கு இது. லோயர் மிடில் கிளாஸைச் சேர்ந்த இந்த பெண்ணுக்கு ஒரு வரன் வருகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை நேரத்தில் இருவருக்கும் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்ய, இந்த விஷயமே தங்களுக்கு தெரியாது மாப்பிள்ளை வீட்டார் குறிப்பிட்ட நேரத்தில் வராமல் சண்டை போடுகிறார்கள். அதன் பிறகு, அவர்களை சமாதானப்படுத்திய பின்பு ஒரு மணி நேரம் கழித்து நிச்சயம் நடக்கிறது. அடுத்த நாள், திருமணத்தின் போதும் சிறு சிறு விஷயத்திற்கு கூட மாப்பிள்ளை வீட்டார் சண்டை போடுகிறார்கள். வீட்டில் செல்லமாக வளர்ந்த சந்தியாவுக்கு அந்த வீட்டுக்கு போவதற்கே பயந்துவிடுகிறாள். அதன் பின்பு, அவளை சமாதானப்படுத்திய பிறகு 7 லட்சம் செலவு செய்து பெண்ணுக்கு 15 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
சந்தியாவின் கணவருக்கு, தான் ஒரு ஆண் என்ற ஈகோ எப்போதும் இருந்திருக்கிறது. பெண்கள் என்றால் சமையல் செய்வது, குழந்தைகளை பெற்றெடுப்பது மட்டும் தான் வேலை என்ற எண்ணம் கொண்டிருப்பவர். அந்த வகையில், சந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவளை கண்ட்ரோல் செய்கிறார். இதனால், பயந்தபோன சந்தியா தன் கணவன் வாங்கிக்கொடுத்த செல்போனில், தன் அப்பா அம்மாவை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வர வேண்டும் என்கிறாள். அதன்படி, சந்தியாவின் அக்கா, அந்த வீட்டுக்கு சென்று மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறாள். அங்கு இருந்த சந்தியா, 10 நாட்கள் ஆனாலும் கணவன் வீட்டுக்கு செல்லவே மனசு வராமல் இருக்கிறாள். அவள், வீட்டிலேயே இருப்பதால் சந்தியாவிடம் மாப்பிள்ளை போன் பேசி சண்டை போடுகிறான். அதன் பிறகு, சந்தியா கணவன் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். 2 நாள் டைம் கிடைத்தால் கூட தன்னுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சந்தியா ஆசைப்படுகிறாள். தன் கண்ட்ரோலை மீறி மனைவி செல்லக்கூடாது என்று எண்ணிக்கொண்டு அவன் அவளை எங்கும் அனுப்ப சம்மதிக்க மாட்டிக்கிறான். இப்படியே நாட்கள் செல்கிறது.
திருமணத்திற்கு முன்பு தன்னுடைய ஆபிஸிற்கு வந்து சந்தியாவின் அக்காவும் அவளுடைய கணவரும் தன்னை பற்றி விசாரித்திருப்பதால், அவர்கள் மீது மாப்பிள்ளை எப்போதும் கோபத்தில் இருந்திருக்கிறான். இதனால், சந்தியாவிடம் அடிக்கடி சண்டை போடுகிறான். அக்காவிடம் சேரக்கூடாது என்ற கண்டிசனும் போடுகிறான். தமது குடும்பத்தினர் பற்றி அடிக்கடி சண்டை போடுவதால் சந்தியாவுக்கு மன அழுத்தம் வந்து மிகவும் சோர்வாகிறாள். இது பற்றி தெரிந்துகொண்ட சந்தியாவின் அம்மா, அவளை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று விசாரிக்கும் போது, மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர வேண்டுமென்றால் மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார்கள். வார விடுமுறை தினத்தில் பெண்ணை தங்களது வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டுமென்று கேட்டால் கூட மாப்பிள்ளை சம்மதிக்க மாட்டிக்கிறான்.
இதற்கிடையில், பொங்கல் சீர் கொண்டு வர மாமனார் நினைத்தாலும், அவரை மனைவியிடம் மிகவும் தரகுறைவாக பேசுகிறான். தன் அப்பாவை பற்றி மரியாதை இல்லாமல் பேசுவதால் சந்தியா மிகவும் மனமுடைந்து அழுகிறாள். இந்த நிலையில், தான் சந்தியாவும் அவளுடைய பெற்றோரும் என்னை சந்தித்து விஷயத்தைச் சொன்னார். மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் சரியாக வரும் என்று அவர்களுக்கு அட்வைஸ் செய்தேன். அதன் பிறகு, கோர்ட்டில் சேர்ந்து வாழ மனு ஒன்றை போட்டோம். கவுன்சிலிங்கில் மாப்பிள்ளையை கண்டதும் சந்தியா பயந்தாள். அவளை சமாதானப்படுத்திய பின்பு பேச்சுவார்த்தை நடத்தியதில், அவளுடைய வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் சேர்ந்து வாழ தயார் என மாப்பிள்ளை கூற, இவள் கடும் மன உளைச்சலாகி அழுகிறாள். 3,4 கவுன்சிலிங் நடந்தாலும், பையன் அதே கண்டிசனும் போடுகிறான். சேர்ந்து வாழ வேண்டுமென்ற நோட்டீஸை அவனுடைய ஆபிஸ் அட்ரஸுக்கு அனுப்பியதால் தன்னுடைய குடும்ப விஷயம் அனைத்தும் ஆபிஸில் உள்ளவர்களுக்கு தெரிந்துவிட்டது என அவன் கவலைப்படுகிறான். இதில், பையன் பக்கமும் நியாயம் இருக்கிறது. இதனால், கோபமடைந்த பையன் இதை சுட்டிக்காட்டியும், பெண் திருமண வாழ்க்கைக்கு ஒத்துவரவில்லை என்றும் கோர்ட்டில், டைவர்ஸுக்கு பையன் பெட்டிசன் போட்டுவிட்டான்.
தன்னுடைய குடும்பத்தோடு சேர வேண்டாமென்றால், கணவனோடு வாழ முடியாது என சந்தியா கூறிவிட்டாள். அதன் பிறகு அவளை சமாதானப்படுத்தி மீடியேசனுக்கு அனுப்பினோம். மீடியேசனில், இந்த குடும்பத்தோடு தனக்கு ஒத்து வரவே வராது என ரொம்ப ஸ்ரிட்டாக சொல்லிவிட்டான். வாரமானால் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சின்ன குழந்தை போல் பேசுகிறாள். என்ன விஷயம் நடந்தாலும், அதை அவளுடைய வீட்டுக்கு சொல்லிவிடுகிறாள். இப்படியிருந்தால், கணவன் மனைவிக்குள் இருக்கும் தனிப்பட்ட விஷயத்தை கூட அவளுடைய வீட்டுக்கு சொல்லிவிடுவாள் என்று அந்த பையன் கூறினார். சிறப்பு கவுன்சிலிங்கிற்கு அவளை அனுப்ப நினைத்தாலும் அவள் போக மறுத்துவிட்டாள். அதன் பிறகு, பையனே தானாக முன்வந்து திருமணத்திற்கு ஆளான செலவை தானே கொடுப்பதாக சொன்னார். மனைவிக்கு போட்ட தான் நகையையும் அவளே வைத்துக்கொள்ளட்டும். ஆனால், இந்த குடும்பம் தனக்கு வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டான். கடைசியில், 5 லட்ச பணத்தை பையன் கொடுத்த பிறகு, மியூட்ச்சுவன் கன்செண்ட்டில் இருவருக்கும் சுமூகமாக விவகாரத்து ஆனது.