Skip to main content

தாம்பத்திய உறவுக்கு மறுப்பு; மனைவியின் உறவில் கணவனுக்கு ஏற்பட்ட வியப்பு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 51 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
advocate-santhakumaris-valakku-en-51 

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

வசந்த் என்பவரின் வழக்கு இது. பி.இ. படித்து முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து போகப் போகிறார். பெண் பார்க்கிறார்கள். இரு வீட்டாருக்கும் பிடித்துப் போகிறது. பெண்ணும் இவருடன் சிரித்துப் பேசி ஒத்துக்கொள்கிறாள். பையன் வீட்டில், பெண் வீட்டாரிடம் எத்தனை பவுன் நகை போடுவீர்கள் என்று எந்த வித டிமாண்டும் செய்யவில்லை. அதிலும் மாறாக நாங்கள் இருபத்தி இரண்டு பவுன் நகை போடுகிறோம் என்று, மகள் போல பார்த்து பார்த்து திருமணம் செய்து அழைத்து போகிறார்கள். பெண் வீட்டிலும் மாப்பிள்ளை பேரில் பத்து பவுன் போடுகிறார்கள். ஆனால் எனக்கு எதுக்கு நகை என்று திருமணம் பின்பு அதை மனைவியிடமே கொடுத்து விடுகிறார். இப்படி திருமணம் ஆன கொஞ்ச நாட்கள் நன்றாக செல்கிறது. ஆனால் பெண் மட்டும் நாட்கள் செல்ல செல்ல விலகிப் போவதை கவனிக்கிறார். 

முதலிரவில் தனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லி இருக்கிறாள். ஏன் சரியாக பேசுவதில்லை என்று கேட்பதற்கும், பேசிக்கொண்டு தானே இருக்கிறேன் என்று வெடுக்கென்று தான் பதில் வருகிறது. சரி ஏன் விலகிப் போகிறாய் என்று கேட்டதற்கு, நீங்கள் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டீர்கள் என்றாள். விருப்பமிருக்கா என்று  கேட்டபோதே சொல்லி இருக்கலாமே என்று கேட்டதற்கு, இல்லை எனக்கு வெளிநாடு போக வேண்டும் என்று தான் ஆசை. திருமணம் செய்துகொண்டு வெளிநாடு போ என்ற என் பெற்றோரின் கட்டாயத்தினால் தான் ஒத்துக் கொண்டேன் என்று அதிர்ச்சி அளிக்கிறாள். நம் சமூக முறைப்படி வாழ வேண்டும். போகப் போக சரியாக மாறி விடுவாள் பார்ப்போம் என்று இவரும் அதை அப்போதே விட்டு விடுகிறார். எப்போது ஆஸ்திரேலியா போகிறோம் என்று கேட்கிறாள். விசாவிற்கு  அப்ளை செய்திருப்பதால் பத்து மாதமாவது ஆகும். நான் அங்கு சென்று விசா உனக்கும் வந்ததும் அழைத்து போவதாகச் சொல்கிறார்.   

என்னால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது. எனக்கு ஆஸ்திரேலியா சுற்றி பார்க்க வேண்டும் என்கிறாள். பையனும் சந்தோஷமாக டூரிஸ்ட் விசா மூலம் அழைத்துச் செல்கிறார். அங்கே நன்றாக சுற்றிப் பார்ப்பது எல்லாமே செய்கிறாள். ஆனால் அவருடன் அருகில் வந்து நிற்பது கூட இல்லை. இப்படியே போகிறது. அவளுக்கு நிரந்தர விசாவிற்கு கிட்டத்தட்ட நான்கரை லட்சம் செலவு செய்து வாங்குகிறார். பின்னர் ஹனிமூனிற்கு  சீனாவிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கேயும் நெருங்க விடுவதில்லை. இதற்கிடையில் அவள் தன் பெற்றோருடன் சிங்கப்பூர் செல்கிறாள். இடைப்பட்ட காலத்தில் மனம் மாறி இருப்பாளோ என்று அங்கு போய் பேசி பார்க்கிறார். ஆனால் ஒன்றும் மாறவில்லை. அடுத்து  விசா கிடைத்து விடுகிறது. இவளும் போட்டிருந்த முப்பத்தி இரண்டு பவுன் நகையை அம்மா வீட்டில் வைத்து விட்டு நிரந்தரமாக ஆஸ்திரேலியா வந்து விடுகிறாள்.

அங்கு வந்து வாழும் போதும் அவள் போக்கு தொடரவே, எவ்வளவோ எடுத்து சொல்கிறார். நமக்கு குழந்தைகள் என்று ஆகிவிட்டால் ஒன்றும் தெரியாது. எனக்கு உன் மேல் எந்த வித வருத்தமும் இல்லை. கணவன் மனைவி என்று நாம் சேர்வது நடந்து விட்டது இனிமேல் நாம் சந்தோஷமாக இருப்போம் என்று பேசிப் பார்க்கிறார். ஆனால் அந்த பெண் எதற்கும் சரி வரவில்லை. போதாதற்கு அவரை அவருடைய கசின்களோடு கம்பேர் வேறு செய்கிறாள். அவர்களை பார். நீ எவ்வளவு ஒல்லியாக இருக்கிறாய் என்று. அவருக்கு ரொம்ப வருத்தம். தான் ஒரு அத்லெட் என்றும், இதில் தவறில்லை என்றும், எப்படி கணவனை வேறொருடன் நீ ஒப்பிட்டு பார்க்கிறாய் என்று கேட்கிறார். உனக்கு அப்படி என்னை பிடிக்கவில்லை என்றால், திருமணம் முன்பே நிராகரித்து இருக்கலாமே என்று கேட்க, உன்னிடம் யார் பேசுவார்கள் என்று வெடுக்கென்று அதோடு நிறுத்தி விடுகிறாள்.

தனக்கு ஒரு க்ளோஸ் பிரெண்ட் இருக்கிறாள். பெயர் மல்லி. என் கூட ஒரு மாதம் தங்குவாள் என்றும் அவள் ஐரோப்பாவில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறாள். இதனை தன் பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லி விடுகிறாள். சரி என்று இவரும் ஒத்துக்கொள்ள, அந்த பெண் வந்ததும் தான் தெரிகிறது, அவர்களின் பழகும் விதமே நட்பு தாண்டி இருக்கிறது. ஒரு கணவன், மனைவி போல நடந்து கொள்கிறார்கள். என்னவென்று இவர் கேட்ட பின்தான் சொல்கிறாள், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ அங்கே சென்னையில் முடியவில்லை எனவே தான் மல்லி என்பவள் முதலில் ஐரோப்பாவிற்கு சென்றாள். நான் வேறு வழி இன்றி திருமணம் செய்து இங்கே வந்திருக்கிறேன் என்கிறாள். உடைந்து போகிறார் இவர். ஒரு மாதம் இங்கே சென்னையில் அந்த பெண் வந்திருக்கும் சமயம், அந்த பையன் இங்கே வந்து என்னிடம் விவரங்களை சொல்லி விவாகரத்து வழக்கு போடுகிறார். அவளும் வந்தவள் மீண்டும் எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை. அவர் ஆஸ்திரேலியா சென்றவுடன், அங்கு அவருக்கு நோட்டீஸ் வருகிறது. 

இவருக்கு மனநலம் சரி இல்லை. இவருடன் கூட சேர்ந்து வாழ முடியாது என்று பொய் வழக்கு போட்டிருக்கிறாள். மனமுடைந்து போனவர் இதற்கு பதில் அளித்தே தீர வேண்டும் என்று என்னிடம் வந்து பேச, வேலையை விட்டுவிட்டு மிகவும் அலைந்து ஒரு வருடத்திற்கும் மேல் இங்கேயே இருக்கிறார். ஆனால் அந்த பெண் இங்கு வரவே இல்லை. எத்தனையோ வக்கீல் மாறினாலும், காலங்கள் ஆகியும் அவள் இங்கே அப்பியர் ஆகவில்லை. நீதிபதியே இந்த பையனின் அலைச்சலை பார்த்து கருணைப்பட்டு ஒருதலைப்பட்சமாக அவள் போட்ட வழக்கை நிராகரித்து  தள்ளுபடி செய்து விடுகிறார். அடுத்து அவள் மேல் புகார் வைத்து நாங்கள் வழக்கை போட்டோம். ஆனால் அவளிருக்கும் இடத்திற்கு நோட்டீஸ் போட்டால் வரவில்லை. வேலை பார்க்கும் இடத்திற்கு நோட்டீஸ் அனுப்பினாலும் பதில் இல்லை. 

இரண்டு வருடம் போராடி இதற்கு மேல் முடியாது என்று வந்தவுடன் அயலக அமைச்சகத்திற்கு கடுதாசி போட்டு, கோர்ட் நோட்டீஸ் கொடுத்திருப்பதை சொல்லி கண்டுபிடித்து தருமாறு கேட்டு அனுப்பினோம். அவர்களின் மூலமாக ஆஸ்திரேலியா எம்பசி மூலம் அழைப்பு விடுத்தாலும், போன் காலை நிராகரித்து விடுகிறாள். அவளின் நண்பர்களை வைத்து பாலோ செய்து, அவள் போகுமிடம் அறிந்து இறுதியாக அவளை இங்கு வரவழைக்க மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கு வந்ததும் நீதிபதி கேட்கிறார், இவருடன் வாழ விருப்பமா இல்லையா என்று கேட்ட பின், நீதிபதியுடன் தனியாக பேசவேண்டும் என்று கேட்டு அவரிடம், உண்மையை ஒத்துக்கொண்டாள். தான் தப்பான அறிவுரையின் பேரில் அவர் மீது பொய்யாக அவர் மெண்டல் என்று கேஸ் போட்டுவிட்டேன். அவர் நல்ல மனிதர் தான் என்று சொல்லி விடுகிறாள். கடைசியாக மியூச்சுவல் கன்செண்ட்டில் டிவோர்ஸ் ஒத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் வசந்த் தரப்பில் போடப்பட்ட இருபத்தி இரண்டு பவுன் திருப்ப கேட்டதற்கு மறுபடியும் பதில் அளிக்காமல் ஒரு வாரம் ஆஜர் ஆகவில்லை. நகையும் திருப்பிக் கொடுக்கவில்லை. 

அந்த பையனை திரும்பியும் ஆஸ்திரேலியாவிலிருந்து வர சொல்ல முடியாது என்பதால், நீதிபதியின் அனுமதியுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி, ஒருதலைப்பட்சமாக வசந்த் என்ற அந்த பையனுக்கு இறுதியாக டைவோர்ஸ் வழங்கப்பட்டது. அந்த பெண்ணும் மல்லியும் சேர்ந்து இங்கே வாழ முடியாது என்பதால், இந்த பையனை வைத்து இப்படி செய்து இருக்கிறார்கள். அவர்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். அவர்களின் உறவை நாம் தவறாகவோ விமர்சிக்கவோ நமக்கு உரிமை இல்லை தான். ஆனால் அவர்கள் வாழ இன்னொரு அப்பாவி மனிதரை பயன்படுத்தி அவருடைய வாழ்க்கையை வீணாக்க கூடாது.