Skip to main content

அதற்கு அவர் தகுதியில்லை; கணவனை குற்றம் சுமத்திய தோல் நோய் மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 50

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
advocate-santhakumaris-valakku-en-50

தான் சந்தித்த வழக்குகளை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக நம்மோடு வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். இதுவரை 49 வழக்குகள் குறித்து நம்மிடையே விவரித்திருக்கிறார். இது 50வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த, என் மகனை போன்றவரின் வழக்கு இது. நான் மிகவும் போராடி ஜெயித்த வழக்கு என்றாலும் மிகையாகாது. இதைப் பற்றியெல்லாம் பேசலாமா என்று நிறைய பேர் தயங்குவார்கள். ஆனால் இது நிறைய பேருக்கு பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன். இருவீட்டு பெற்றோர்களின் சம்மதத்தோடு பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இருவருக்கும் மிகவும் பிடித்திருந்து ஆரம்பகால வாழ்க்கை வழக்கம் போல நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் போகப் போக அந்த பெண்ணின் குணாதிசயங்கள் வித்தியாசமாக மாற ஆரம்பித்தது. எல்லோரையும் பற்றி அவங்க இப்படிப்பட்டவங்க, இவங்க அப்படிப்பட்டவங்க என்று புறம் பேசுதல் அந்த பையனின் அம்மாவிற்கு வித்தியாசமாக இருந்தது. அந்த பெண்ணின் கோணத்தில் எல்லாரைப் பற்றியும் தப்பாக பேசுதல் என்பது பையனின் குடும்பத்திற்கு நெருடலாக இருந்தது. 

அந்த பெண் ஒருநாள் தன் கணவனிடம், தன் அப்பாவின் கம்பெனிக்காக நாற்பது லட்சம் பணம் கேட்கிறாள். அந்த பையனும் தயங்கி முதலில் நம் வாழ்க்கையை பார்ப்போம், அவ்வளவு பணம் என்னிடம் இல்லை மற்றும் கொடுப்பதும் சரியாக இருக்குமா என்றும் தெரியவில்லை என்று சொல்லிவிடுகிறார். ஆனால் அந்த பெண்ணை, கணவன் எந்த குறையும் இல்லாமல் நன்றாக வசதியாக செலவு செய்து தான் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இந்த பெண்ணோ, இங்கே நடக்கும் ஒரு சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கி, ஒரு கதை போல மற்றவர்களிடம் சொல்கிறாள். தன் பிறந்த வீட்டில், இவர்கள் நிறைய வேலை வாங்குகிறார்கள் என்று சொல்கிறாள். ஆனால் இவர்கள் நல்ல வசதியான குடும்பம், எல்லாவற்றிற்கும் மிஷின் இருக்கிறது, வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். இவளை வேலை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன் இப்படி பேசுகிறாள் என்று கவலைப்படுகிறார்கள். இப்படியே போகப் போக இருவருக்கும்  சில கருத்து வேறுபாடுகள் வருகிறது.

தன் கணவன் சிகரெட் பிடிப்பது தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறாள். பாத்ரூமில் ஏழெட்டு சோப்புகள் பயன்படுத்துவதைப் பார்த்து கேட்டபோது, இது எல்லாமே என் தோல் பொலிவுக்கு, அழகுக்கு என்று சொல்லி சமாளிக்கிறாள். ஆனால் அவை அனைத்துமே தோல் நோய்க்கான மருந்து சோப்புகள். இது போக அந்த பையனுக்கும் அவளுக்கும் நிறைய இடைவெளி இருப்பதைக் கண்ட அவரது அம்மா, என்னவென்று விசாரிக்க, அவள் மீது ஒருவகை துர்நாற்றம் வருகிறது. பிடிக்கவில்லை என்றும் ஏதோ ஒரு தோல் நோய் இருப்பதாக சொல்கிறான். இதனால் அந்த பெண்ணோ சில நாட்களுக்கு அம்மா வீட்டுக்கு சென்றிருக்கிறாள். சரி செய்துவிடலாம் என்று சொல்லி அவளை அழைத்தாலும் வரவில்லை.

அம்மா வீட்டுக்கு சென்றவளோ, அவளது குடும்பத்தினரிடம் தன் கணவனுக்கு பாலியல் நாட்டம் இல்லை, குடும்பம் நடத்த அவரால் முடியவில்லை. அதற்கு அவர் ஏற்றவர் இல்லை அதனால் என் மீது தோல் பிரச்சனை என்று திசை திருப்பி இருக்கிறார் என்று அப்படியே கதையை மாற்றி விடுகிறாள். இதற்கு பின்பு தான் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் என்னைப் பார்க்க வந்தனர். அந்த பையனுக்கும் தன்னை ஆண்மை இல்லை என்றெல்லாம் சொல்லியது மிகவும் பாதித்து இருந்தது. வாழவும் விருப்பமில்லை என்று தெரிந்து கொண்டு டைவர்ஸ் கேஸ் போடலாம் என்று பதிவு செய்கிறோம். உடனே அந்த பெண் அங்கிருந்து சேர்ந்து வாழ வேண்டும் என்றும், எங்களுடைய 800 பவுன் நகை அவர்களிடம் இருக்கிறது. இப்போது அவர்கள் என்னை துரத்தவே இப்படி செய்கிறார்கள் என்று ஒரு வழக்கு போடுகிறாள். இப்படி இரண்டு வழக்குகளும் சேர்ந்து சென்னை நீதிமன்றத்திற்கு வருகிறது. நியாயப்படி பார்த்தால், அந்த பையனுக்கு ஆண்மை இல்லை என்றால், சேர்ந்து வாழ வேண்டும் என்று எப்படி கேஸ் போட முடியும், மேலும் அவள்தான் இதை நிரூபிக்க வேண்டும் என்று புகார் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த பையன் தான் எந்தவித மருத்துவ பரிசோதனைக்கும் தான் நிரூபிக்க தயாராக இருப்பதாக சொல்லிவிடுகிறார்.  

இப்படி இருக்க, அந்த தம்பியிடம் இருந்து ஒரு தகவல் கேஸ்க்கு உபயோகமான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக வந்தது. என்னவென்றால் அவர்கள் இருவரும் தங்கள் பெட்ரூமில் திருமணமான புதிதில் உபயோகப்படுத்திய போர்வை கிடைத்திருக்கிறது என்று. அதில் இருவரது உடல் திரவமும் இருக்க சாத்திய கூறு இருக்க, போதிய ஆதாரம் கிடைக்கவே அதை நாங்கள் கோர்ட்டில் சமர்ப்பித்து மேலே தொடர அனுமதி கேட்டோம். நீதிபதி அதனை டி.என்.ஏ பரிசோதனைக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு எழுதி தந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணின் தரப்பிலிருந்து, இது ஏமாற்று வேலை, வேறொருவருடையதை வைத்து போலியானதாக திரிக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். எங்களுக்கு பரிசோதனை முடிவில், அதில் விந்து இருப்பதற்கான ஆதாரமும் உறுதி ஆகி எங்களுக்கு சாதகமாகத்தான் வந்தது. 

அடுத்ததாக பெண்ணும் பையனும் ரத்த மாதிரியை டெஸ்ட்க்கு கொடுக்கும்படி வந்தது. இருவர் மட்டும் அங்கே இருந்தால், நிலைமை பிரச்சனையில் முடியலாம் என்று எங்கள் பக்கத்திற்கு ஒரு ஜூனியர் வக்கீலை அனுப்பி வைத்தோம். ஆனாலும் அந்த பெண் ரத்தத்தை கொடுக்கவே இல்லை. ஏனென்றால், டாக்டரும் அந்த பையனும் சிரித்து சிரித்து பேசுகிறார்கள், இதில் சதி இருக்கிறது. எனவே நான் என்னுடைய ரத்த மாதிரியை கொடுக்கமாட்டேன் என்று ஒரே ரகளை. சரி என்று அவள் வழியிலேயே உனக்கு சந்தேகம் இருந்தால் வேறு மருத்துவமனை கூட போகலாம் அங்கே டெஸ்ட்க்கு கொடு என்றால் அதற்கும் வழி இல்லை. இதிலேயே பெரிய சந்தேகம் உறுதி ஆகி, நீதிபதி இந்த வழக்கில் பெண் வைக்கும் எந்த வித குற்றச்சாட்டிலும் உண்மையே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்து வைத்தார். அவர்கள் பக்கம் கேட்டிருந்த தங்க நகை புகாருக்கு, இந்த பையன் வீட்டிலும் முழுமையாக கொடுத்து விடுவதாக சொல்லிவிட்டனர். 

அதற்குப் பின்னே தான் அந்த பெண் இறங்கி வந்து, வக்கீலை அனுப்பி இருபக்கமும் மியூச்சுவல் டிவோர்ஸ் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டனர். கடைசியாகத் தான் எல்லாம் முடிந்தது. ஆனால் இதில் அவமானம் மிகவும் ஏற்பட்டது அந்த பையனுக்கே. ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த விஷயத்தில் இப்படி ஒரு புகார் வைத்தால் எப்படி வெளியே தலை நிமிர்ந்து போக முடியும். எனவே ஒரு பையனுக்கு ஆண்மை இல்லை என்றெல்லாம் புகார் வைத்தால் கண்டிப்பாக பயப்படவோ தயங்கவோ தேவையில்லை. உங்கள் மீது மருத்துவப்பூர்வமாக ஆதாரம் இருந்தால், நிச்சயமாக கோர்ட்டில் கேஸ் போட்டு வெற்றி பெறலாம்.