Skip to main content

மணமேடையில் நிற்க வேண்டிய கல்யாணம்; ஆம்பளைங்க ஜாக்கிரதையா இருக்கணும் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 38

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

 advocate-santhakumaris-valakku-en-38

 

திருமணத்தின் போது ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை ஒரு வழக்கின் மூலம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

ரஞ்சித் என்பவரின் வழக்கு இது. மிகவும் சாதாரணமான குடும்பம். வயதான பெற்றோர். ரஞ்சித் சென்னையில் வேலை பார்த்து வந்தார். திருமணத்துக்கான நேரம் வந்தது. பெண்ணோடு ஃபோனில் பேசும்போது அவளிடமிருந்து ஒரு நெருக்கத்தை அவரால் உணர முடியவில்லை. அதுகுறித்து தன் தந்தையிடம் தெரிவித்தபோது அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கல்யாணத்துக்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம். அந்த நிகழ்ச்சிக்கு பெண் வீட்டார் யாரும் வரவில்லை. மாப்பிள்ளை வீட்டாருக்கு அதிர்ச்சி. 

 

அதன் பிறகு சமாதானம் நடைபெற்று திருமணமும் நடைபெற்றது. ஆனால் அது ஒரு மகிழ்ச்சிகரமான திருமண நிகழ்வாக இல்லை என்பது அவனுக்கு புரிந்தது. தொடர்ந்து அவன் குறித்தும் அவனுடைய குடும்பம் குறித்தும் பல்வேறு புகார்களை சொல்லிக்கொண்டே இருந்தாள் அவள். மறுவீடு சம்பிரதாயத்திற்காக பெண் வீட்டுக்கு செல்லும்போதும் ஏகப்பட்ட குழப்பங்கள். இவன் என்னவோ கொடுமை செய்வது போல் அவளும் அவளுடைய குடும்பத்தினரும் ஒரு தோற்றத்தை உருவாக்கினர். 

 

அவனுக்கு அருகில் வரக்கூட அவள் மறுத்தாள். மாப்பிள்ளை வீட்டுக்கே வந்து பெண் வீட்டார் கலாட்டா செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் மீது போலீசில் அவர்கள் புகார் கொடுத்தனர். மாமனார் மாமியார் உட்பட அத்தனை பேர் மீதும் அவர்கள் வழக்கு தொடுத்தனர். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் அவர்கள் அனைவருக்கும் பெயில் வாங்கினோம். தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்துக்கொண்டே இருந்தனர். இறுதியில் அவர்களுக்கு ஏழு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டது. 

 

அதன் பிறகு தான் தங்களுடைய வழக்கை அவர்கள் வாபஸ் பெற்றனர். இதன்மூலம் இருதரப்பும் ஒப்புக்கொண்டு அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த வழக்கிலேயே அந்தப் பையனுக்கு ஒரு வருடம் கடந்துவிட்டது. ஆண்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த வழக்கின் மூலம் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியெல்லாம் ஒரு பெண் இருக்க முடியுமா என்று இந்த வழக்கின் மூலம் நமக்கே யோசிக்கத் தோன்றுகிறது. ஒன்றுமே நடக்காமல், அவர்களாக பிரச்சனையை உருவாக்கி ஏழு லட்சம் சம்பாதித்துவிட்டனர்.