Skip to main content

குடிக்கும் மனைவி; பாடாய்ப்படுத்தப்பட்ட கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 36

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

advocate-santhakumaris-valakku-en-36

 

பலரது இல்லற வாழ்வு என்பது குடிப்பழக்கத்தால் எவ்வளவு சிதைந்திருக்கிறது என்பதை கேள்விப்பட்டிருப்போம். இங்கே குடிக்கும் மனைவியால் பாடாய்ப்படுத்தப்பட்ட கணவனின் கதை குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார். 

 

சுனில் என்பவருடைய கதை இது. மிகப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். சில காலம் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். விழாக்களுக்குச் செல்லும்போது அந்தப் பெண்ணுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவளால் குடியை நிறுத்த முடியவில்லை. குடியை நிறுத்தச் சொல்லி கணவன் சொன்னாலும் அவள் கேட்கவில்லை. இருவருக்குமிடையே பிரச்சனை அதிகரித்துக்கொண்டே சென்றது. அவளை மருத்துவரிடம் அவர் அழைத்துச் சென்றார். 

 

மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை வழங்கினாலும் அதன் பிறகும் அவளுடைய பழக்கம் குறையவில்லை. குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்க ஆரம்பித்தாள். இதனால் வீட்டுக்கு தேவையான பணத்தை அவளிடம் கொடுப்பதை அவர் நிறுத்தினார். அவர்களுடைய வீட்டில் அவரின் சகோதரர் குடும்பமும் வாழ்ந்து வந்தது. அவர் பணம் கொடுப்பதை நிறுத்தியதால், அவருக்கும் அவருடைய சகோதரரின் மனைவிக்கும் தொடர்பிருக்கிறது என்று இவள் பொய்யாகக் கிளப்பிவிட்டாள். குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன. இதுபற்றி அவள் தன்னுடைய சமூகவலைத்தளங்களிலும் எழுதினாள். 

 

தனிக்குடித்தனம் செல்ல அவருக்கு விருப்பமில்லை. ஆனாலும் அவளை அங்கு விட்டுவிட்டு இவர் அடிக்கடி தன்னுடைய குடும்பத்தினர் இருக்கும் வீட்டுக்கு வந்தார். அனைத்து விதங்களிலும் அவருக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. அவளுக்கு பணம் கொடுப்பதை அவர் முழுமையாக நிறுத்தினார். அவருடைய கம்பெனிக்கு சென்ற அவள், அங்கு அட்டகாசம் செய்தாள். அவர் போலீசில் புகார் கொடுத்தார். கொஞ்ச நாளைக்கு அவள் திருந்த வாய்ப்பு கொடுக்குமாறு போலீசார் கூறினர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவளும் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தாள். ஒருநாள் வீட்டு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 7 லட்ச ரூபாயைக் காணவில்லை. அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவள் கூறினாள். அடுத்த நாள் ஒரு நகைக்கடையில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவருடைய மனைவி ஏழரை லட்சம் ரூபாய்க்கு நகை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு போலீசாரிடமிருந்து அவருக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக நோட்டீஸ் வந்தது. அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாத அவர் என்னிடம் வந்தார். நீதிமன்றத்தில் அவள் தனக்கு 10 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டாள். தனக்கு சாதகமாக சில உத்தரவுகளையும் நீதிமன்றத்தில் அவள் வாங்கினாள். 

 

அந்த உத்தரவுகளுக்கு தடை வாங்கப்பட்டது. அத்தனை வலிகளையும் மனதில் சுமந்துகொண்டு அவர் அந்த வழக்கை நடத்தினார். வீட்டில் பாதிப் பங்கை அவளுக்கு கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்கான அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார். அவருடைய குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார். இன்று அவருடைய குழந்தைகள் பட்டங்கள் பெற்று நல்ல நிலையில் இருக்கின்றனர். அதன் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்குத் தேவையான அமைதி அவருக்குக் கிடைத்தது.