உறவாடும் நண்பர்கள், மற்றும் அவர்களது நட்புக்கான அளவுகோல் குறித்து ஒரு வழக்கு மூலம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்
செந்தில் என்பவருடைய வழக்கு இது. ஒரு ஆட்டோ டிரைவர் அவர். தன்னுடைய வாழ்க்கையே போய்விட்டது என்று அவர் கண்ணீர் விட்டார். ஆட்டோவுக்கு மாதத்தவணை செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. தன்னுடைய ஏரியாவில் ஒரு பெண்ணை விரும்பிய செந்தில், அவளைத் திருமணம் செய்ய விரும்பினார். அந்தக் குடும்பம் சரியில்லை என்கிற எச்சரிக்கை வந்தாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. பெற்றோரை சமாதானப்படுத்தி திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு சிறிது காலம் அவர்கள் சந்தோஷமாகவே இருந்தனர். காலம் செல்லச் செல்ல அந்தப் பெண்ணின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. அவருடைய தாயை அவளுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர் தனிக்குடித்தனம் சென்றார். எப்போதும் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பினார் அவருடைய அப்பா. அவளுடைய தேவைகள் அதிகரித்ததால் ஆட்டோவுக்கு தவணை கட்ட வைத்திருந்த பணத்தை அவளிடம் அவர் வழங்கினார். அதனால் அவரால் சரியான நேரத்திற்கு தவணைப் பணத்தைக் கட்ட முடியவில்லை. கடன் தொல்லை அதிகரித்தது.
சங்கர் என்ற நண்பன் ஒருவன் செந்திலுக்கு உதவுவதாக முன் வந்தான். செந்திலும் அந்த உதவியை ஏற்றுக்கொண்டார். செந்திலுடைய லைசென்ஸையும் அவன் வாங்கிக்கொண்டான். அதை திருப்பிக் கேட்டபோது டூப்ளிகேட் லைசென்ஸ் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தான். அதன் பிறகு சங்கர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தான். சங்கருக்கு செந்திலின் மனைவியோடு பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. இதை கவனித்த செந்திலின் தாய் செந்திலை எச்சரித்தார். அடிக்கடி வெளியே சென்று வர ஆரம்பித்தாள். விசாரித்தபோது பெண் தோழியுடன் தான் வெளியே சென்றதாக அவள் பொய் கூறினாள்.
தான் கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பிக் கேட்டு செந்திலை சங்கர் மிரட்ட ஆரம்பித்தான். சங்கரோடு அவளுக்கு ஏற்பட்ட பழக்கம் குறித்து செந்தில் எச்சரித்தபோது, தற்கொலை செய்துகொள்வேன் என்று அவள் மிரட்டினாள். ஒருநாள் அதற்கு அவள் முயற்சியும் செய்தாள். அப்போது செந்தில் அவளை சமாதானப்படுத்தினார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருந்தனர். திடீரென ஒருநாள் அவள் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றாள். அம்மா வீட்டில் அவள் இருந்ததைப் பார்த்து அவன் ஆசுவாசமடைந்தான். அவளிடமிருந்து அதன் பிறகு அவனுக்கு போன் வந்தது. சந்தேகப்படுவதாலும், கடனைக் கொடுக்க மறுப்பதாலும் வீட்டுக்கு வர முடியாது என்று அவள் கூறினாள்.
அன்றைய தினமே வீட்டுக்கு வந்த சங்கர், ஆட்டோவின் சாவியைப் பிடுங்கினான். கடனை திருப்பித் தருமாறு கேட்டான். செந்திலின் தந்தை 50000 ரூபாய் பணம் கொடுத்தார். கடனை அடைத்துவிட்டு மனைவியை வீட்டுக்கு அழைத்து வருமாறு கூறினார். மனைவியைத் தேடி அவளுடைய தாய் வீட்டுக்கு சென்றபோது அவளுடைய குடும்பத்தினர் செந்திலை அடித்தனர். அழுதுகொண்டே அவர் வீடு திரும்பினார். சங்கரோடு வாழவே தான் விரும்புவதாக அவள் வெளிப்படையாக தெரிவித்தாள். அப்போதுதான் செந்தில் நம்மிடம் வந்தார். இந்த நிலையிலும் மனைவியோடு சேர்ந்து வாழவே அவர் விரும்பினார்.
எனவே சேர்ந்து வாழ்வதற்காக கேஸ் போட்டோம். விவாகரத்து வழங்க வேண்டி அவள் வற்புறுத்தினாள். அதன் பிறகு விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தோம். அவள் அதில் ஆஜராகவில்லை. எனவே விவாகரத்து வழங்கப்பட்டது. நட்பு என்பது எப்போதும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். வேண்டாத உறவுகளைத் தவிர்க்க வேண்டும்.