குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிர்ந்த ஒரு வழக்கைப் பற்றி பார்ப்போம்.
சுகேஷ் என்ற பையனுடைய வழக்கு இது. கட்டுமான தொழில் செய்து வந்த அந்த பையனுக்கு நல்ல வருமானம் வந்துள்ளது. அவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, ஒரு பெண்ணைப் பார்த்துள்ளனர். அந்த பெண்ணை அவருக்கு பிடித்துப் போகத் திருமணத்திற்கு தயாரானார். அதோடு அந்த மணப்பெண் வீட்டாரிடம் கல்யாணச் செலவை மட்டும் பார்க்கச் சொல்லிவிட்டு தான் கட்டிக்கப் போகும் பெண்ணுக்கு 12பவுன் நகை போட்டு, மண்டப வாடகை கொடுத்து திருமணம் முடித்துள்ளார். பெண் வீட்டார் வெறும் சாப்பாடு செலவை மட்டும் செய்துள்ளனர்.
திருமணம் முடிந்த அந்த பெண் சுகேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்பு தனது மனைவியுடன் ஹனிமூன் சென்ற சுகேஷ் சுற்றிப்பார்க்க ரூ.12 லட்சத்திற்கு செலவு செய்துள்ளார். காஷ்மீரில் ஆரம்பித்து 1 மாதமாக நிறையப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்துள்ளனர். சுற்றிப்பார்த்த இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்து நினைவுகளைச் சேகரித்திருக்கின்றனர். ஹனிமூனுக்கு பிறகு சுகேஷின் மனைவி தனது மாமியார் சொன்ன விஷயங்களுக்கு முரணாக நடந்துள்ளார். இதனால் வீட்டில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு சுகேஷின் மனைவிக்கு சிறுநீரி ரத்தம் கலந்து வந்துள்ளது. அதன் பிறகு தன் மனைவியை மருத்துவமனையில் சுகேஷ் சேர்த்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு யூரினரி ட்ராக்ட் இன்பெக்ஷன் 2 வருடமாக இருந்தது தெரியவந்துள்ளது. அப்போது மருத்துவர் சுகேஷிடம் மனைவியுடன் உடலுறவு வைத்திருக்கும் உனக்கு இதைப்பற்றித் தெரியாதா? என்று சொல்லிக் கண்டித்துள்ளார். அதற்கு சுகேஷ் உடலுறவு விசயத்தில் மனைவிதான் முதல் பெண் அதனால் நோய் இருந்ததை கவனிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
அதன் பிறகு சுகேஷ் வீட்டில் இருக்க அவரது மனைவிக்கு பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதைத் தொடர்ந்து சுகேஷ் வீட்டுக்கு அவரது மனைவி ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் மாமியார் கொடுமைப்படுத்தியதாகவும் கணவர் அடித்ததில் பிறப்புறுப்பில் இரத்தம் வரும் அளவிற்கு கொடுமை அனுபவித்ததாக கூறி வாழ விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். சாப்பாடு போடவில்லை. சரியாக பார்த்து கொள்ளவில்லை. தாம்பத்திய உறவில் ஈடுபாடுடன் கணவர் இருப்பதில்லை. கல்யாணச் செலவை ஏற்றுக்கொள்ளவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருந்தது. அந்த நோட்டீஸுடன் சுகேஷ் என்னை பார்க்க வந்தார். ஆனால் அவருக்கு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவரது மனைவிக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் இருந்தது. அதனால் அந்த பெண் மெயிண்டனன்ஸ் வழக்கும் தொடர்ந்திருந்தார்.
சுகேஷ் மனைவி சொன்ன அனைத்து புகார்களும் பொய் என்று நிரூபிக்க அனைத்து வித ஆதாரங்களையும் சுகேஷ் வைத்திருந்தார். திருமணச் செலவு, ஹனிமூன் செலவு எனப் பல ஆதாரங்கள் கொடுத்தார். அதோடு அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லாதபோது மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்து வீட்டிற்கு தாமதமாக போன போது, மனைவி உடலுறவுக்கு அழைத்தால் விருப்பமின்றி விலகி விடுவேன் என்றும் கூறினார். பின்பு பிறப்பிறுப்பில் ரத்தம் வந்தது அடித்ததால் இல்லை மனைவிக்கு முன்பே நோய் இருந்தது. அதற்கும் மருத்துவ செலவுகள் பார்த்துள்ளேன் என்று அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தார்.
தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவித்ததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இருந்தாலும் மனைவிக்கு கண்டிப்பான முறையில் பணம் தர வேண்டும் என்று சட்டத்தில் இருப்பதால், பணம் கொடுத்து ஆக வேண்டுமென நீதிபதி கூற, அதற்கு சுகேஷ் என்னுடன் வாழ்ந்தால்தான் மனைவி இல்லையென்றால் நான் பணம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று சொன்னார். பின்பு நீதிபதி சுகேஷையும் அவரது மனைவியையும் மீடியேசனுக்கு அனுப்பினார். அங்கு தனக்கு ரூ.25 லட்சம் பணம் வேண்டுமென்று சுகேஷ் மனைவி கேட்டுள்ளார். ஆனால் சுகேஷ் தர மறுத்தார். பின்பு அந்த பெண் அந்த திருமணத்திற்கு போட்ட 12 பவுன் நகையை வைத்துக்கொள்கிறேன் என்று அதை எடுத்து வைத்துக்கொண்டார். பின்பு நீதிமன்றத்தில் 12 பவுன் நகையை வைத்துக்கொள்ளட்டும். ஆனால் பணம் தர முடியாது என்று கூற அதற்கு அந்த பெண்ணும் ஒப்புக்கொண்டு விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்தார். விரக்தியில் சுகேஷும் விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டார். இருவருக்கும் விவாகரத்தாகி இந்த வழக்கும் முடிவடைந்தது