Skip to main content

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஊர்வலம்... ரயிலையே முன்பதிவு செய்த வரதா பாய்! தாராவி கதைகள் #5

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ஒருகாலத்தில் தாராவியில் பெரும்பான்மையாக வசித்த தமிழர்கள், இன்று அங்கிருந்து வெளியேறு ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தாராவியின் மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காடு இருந்த தமிழர்கள், இன்று 15 விழுக்காடுகூட இல்லை. ஏன் இந்த நிலை வந்தது? தாராவியின் தற்போதைய மக்கள் தொகையில் 80 விழுக்காடு முகமதியர்கள் உள்ளனர். 5 முதல் 10 விழுக்காடுவரை தெலுங்கர்கள் உள்ளனர். தாராவி மும்பையின் மத்தியில் உள்ளது. இருப்பினும், இங்கிருந்து தமிழர்கள் வெளியேறியது ஏன்? தாராவி பகுதியில் தற்போது வீடு கட்ட ஆரம்பித்துவிட்டனர். 180 மற்றும் 210 சதுரஅடி என இரு அளவுகளில் அந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்படுகின்றன. வீட்டின் நான்கு பக்கச் சுவர்களும் நான் மேலே கூறிய அளவிற்குள் அடங்கும். அதாவது 10க்கு 8 என்ற அளவுள்ள வீடு. தற்போது இதனுடைய விலை 35 லட்சம். 210 சதுரஅடி அளவுள்ள வீடு என்றால் 55 லட்சம். இவ்வளவு விலை கொடுத்து ஏன் இந்தப் பகுதியில் வசிக்க வேண்டும் என நம் ஆட்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், கோவண்டி, நவி மும்பை போன்ற பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். ஏற்கெனவே பெரும்பாலான தமிழர்கள் வெளியேறிவிட்டார்கள். சொற்ப அளவில் வசித்துவரும் தமிழர்களும் தங்களுடைய குடிசைகளை விற்று, அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு தாராவியில் இருந்து வெளியேறும் முயற்சியில்தான் இருக்கிறார்கள். 

 

ஒருகாலத்தில் தினசரி 200 குடும்பங்கள் பிழைப்புத் தேடி தமிழகத்திலிருந்து தாராவி நோக்கி வருவார்கள். இன்று அந்த நிலை மாறிவிட்டது. பணிமாற்றம் மற்றும் தொழில்ரீதியாக செல்பவர்களைத் தவிர்த்து, கடந்த 5 ஆண்டுகளில் பிழைப்புத் தேடி யாரும் அங்கு செல்வதேயில்லை. அங்கிருந்த டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் என பெரும்பாலானோர் தமிழர்களாகத்தான் இருந்தார்கள். இன்று அந்த வேலைகளை பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் தாராவி என்றால் அதுவும் தமிழ்நாடுதான். எனக்கு பெற்றத்தாய் ஆறாவயல் என்றால், வளர்ப்புத்தாய் தாராவி என நானே பல இடங்களில் கூறியிருக்கிறேன். தோல் தொழிற்சாலை, மர வேலை, வாடகை வண்டி ஓட்டியவர்களுக்கெல்லாம் இன்று வயதாகிவிட்டது. அவர்களது பிள்ளைகள் வேறுவேறு வேலைக்குச் சென்றுவிட்டதால் இனி எதற்கு நெருக்கடியான இந்த இடத்திற்குள் இருக்க வேண்டும் என்று நினைத்து பெரும்பாலான குடும்பங்கள் வெளியேறிவிட்டன. 

 

dharavi

 

நான் தாராவிக்குச் சென்ற காலத்தில், தாராவியைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கட்டடங்கள் இருக்கும். ஆனால், தாராவிக்குள் ஒரு கட்டடம்கூட இருக்காது. குடிசைகளிலான வீடுகள் மட்டும்தான் அங்கு நிறைந்திருக்கும். ஒவ்வொரு குடிசையும் 15 அடி உயரத்திற்கு அமைத்திருப்பார்கள். குடிசைக்குள் ஒரு பரண் அமைத்து அதில் பொருட்களை அடுக்கிவைப்பார்கள். பொங்கல் வீடு என்று அங்கு பழக்கம் உள்ளது. வேலைதேடி வரும் பேச்சிலர்கள் அந்த வீடுகளில்தான் தங்குவார்கள். 100 சதுர அடி இடங்கொண்ட வீட்டில் ஒரு பாய் விரிக்கும் அளவிலான இடத்தை ஒதுக்கிக்கொடுப்பார்கள். படுப்பதற்கு அவர்களே ஒரு பாயும் கொடுத்துவிடுவார்கள். அப்படி அந்த அறையில் நிறைய பேர் பாய் விரித்து தங்கியிருப்பார்கள். சமைப்பதென்றால் வெளியே சென்று சமைத்துக்கொள்ள வேண்டும். மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்கள் ஆங்காங்கே கட்டிவிடப்பட்டிருக்கும். காலைக்கடன் கழிப்பதற்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொங்கல் வீடுகள் மட்டும் இரு அடுக்கு உடைய குடிசை வீடுகளாக இருக்கும். மாத வாடகை, தினசரி வாடகை என ஒவ்வொரு விதமாக அதற்கான வாடகையை வசூலித்துக்கொள்வார்கள். தாராவியின் ஓரத்தில் 10 மாடி கட்டடம் ஒன்று இருக்கும். அதில் ஏறிப் பார்த்தால் வரிசையாக குடிசைகளும் அதற்கிடையே கோடு கிழித்ததுபோல பாதைகளும் தெரியும். 

 

தாராவி பகுதியில் நடந்த கவுன்சிலர் தேர்தலிலேயே மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றவர் எஸ்.கே. ராமசாமிதான். அவரை எஸ்.கே.ஆர் என்றுதான் அழைப்பார்கள்.  தாராவி தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம்மவர் ஒருவர் வர வேண்டும் என முடிவெடுத்து, அவரை பெருவாரியாக வெற்றிபெறவைத்தனர். ஆனால், எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல்களில் தமிழர்கள் யாரும் வென்றுவிடக்கூடாது என்பதில் அங்கிருந்தவர்கள் கவனமாக இருந்தனர். தாராவி பகுதிக்குள் வந்து தாக்கரே கூட்டம் போடும்போதெல்லாம் தெற்கு, வடக்குமாகத் திரும்பிப் பார்ப்பார். அந்த அளவிற்கு தமிழர்கள் அங்கே திரண்டிருப்பார்கள். 

 

‘நாயகன்’ படத்தில் கமலின் தோற்றம் வரதராஜ முதலியார் மாதிரியே அச்சுஅசலாக இருக்கும். அவரை வரதா பாய் என்றுதான் அழைப்பார்கள். அவருக்கும் தாராவிக்கும் சம்மந்தமில்லை. தாராவியில் இருந்து சிறிது தூரம் தள்ளி கோலிவாடா என்ற பகுதி இருக்கும். அங்குதான் அவர் தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்துவந்தார். இலங்கை பிரச்சினையை முன்வைத்து தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவாக ஓர் ஊர்வலத்திற்கு அவர் ஏற்பாடு செய்தார். தாராவியில் இருந்து ஆசாத் மைதானத்திற்கு தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக ஒரு ரயிலையே முன்பதிவு செய்தார். அந்த மைதானத்திற்கு அருகில்தான் இலங்கை தூதரகம் இருந்தது. அதுபோக, ஆட்களை ஏற்றிச் செல்ல லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. போலீசாரும் அதற்கான அனுமதி வழங்கிவிட்டனர். தாராவியில் இருந்த படித்தவர்கள் மத்தியில் வரதா பாய் மீது சில விமர்சனங்கள் இருந்தன. அதனால், நம்மை வழிநடத்தக்கூடிய தலைவன் எப்படி இருக்க வேண்டும்... எப்படிப்பட்ட ஆட்களின் பின்னால் நாம் செல்ல வேண்டும் என்ற குழப்பம் என்னை மாதிரி ஆட்களுக்கு இருந்தது. கடைசியில், தமிழர்களுக்காக நடக்கும் ஊர்வலம்தானே... யார் வழிநடத்தினால் என்ன என நினைத்து நாங்களும் கலந்துகொள்ளலாம் என முடிவெடுத்தோம். மாலைதான் ஊர்வலம் நடக்க இருந்தது. அன்று காலையில் யார் வேலைக்குச் சென்றாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தி, வரதா பாய் ஆட்கள் அடிக்க ஆரம்பித்தனர். இது மாதிரியான ரவுடிகள்கிட்ட மாட்டிக்கொண்டோமே என அங்கிருந்த மக்கள் பலமுறை நினைத்திருக்கிறார்கள். திடீரென அன்று மாலை லாரிகளில் ஊர்வலம் செல்ல கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிடுகின்றனர். சரி... நடந்து போகலாம் என முடிவெடுத்து அனைவரும் அணிவகுத்துச் செல்ல ஆரம்பித்தனர். அந்த ஊர்வலத்தில் 40 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர். ஊர்வலம் செல்லச் செல்ல வழியெங்கும் இருந்த கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டனர். மாடுங்கா ஸ்டேஷனை அடித்து நொறுக்கிவிட்டனர். அதாவது, இலங்கையில் அடிபடும் தமிழர்களுக்காக மஹாராஷ்ட்ராவில் நாம் வாழும் பகுதியை இவ்வாறு நாசம் செய்துகொண்டு சென்றோம்.

முந்தைய பகுதி...

 

 

Next Story

"தமிழர்கள் கடைசிவரை கூலித்தொழிலாளியாக இருந்ததற்கு இதுதான் காரணம்..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! #8

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவி தமிழர்கள் பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கான காரணம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தாராவிக்கு மனிதநேயமிக்க முகம் ஒன்று உள்ளது. அங்கு வீடுகள் நெருக்கமாக இருப்பதால் யார்யார் வீட்டில் சமையல் நடக்கிறது; அடுப்பு எரிகிறது என்பதெல்லாம் தெரிந்துவிடும். தொடர்ந்து இரு நாட்கள் ஒரு வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து காரணம் கேட்பார்கள். கையில் பணமில்லை என்பதற்காக ஒருவர் சமைக்காமல் பட்டினியாகக் கிடக்கிறார் என்றால் மற்றவர்கள் கோபப்படுவார்கள். 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. வா இருக்கிறதை பகிர்ந்து சாப்பிடலாம்' என்று கூறி அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இந்தப் பழக்கம் அங்கு வசித்த எல்லா மொழி பேசும் மக்களிடமும் இருந்தது. தாராவி என்ற பெயர் எதற்காக வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்து நிறையத் தேடிப்பார்த்தோம். எந்த இடத்திலும் அதற்கான சரியான பதில் இல்லை. மும்பை என்ற பெயர் வந்ததற்குக் காரணம் அங்கு மும்பாதேவி கோவில் என்று ஒரு கோவில் இருந்தது. அது மீனவ மக்களுக்கான கோவில். மும்பா என்பது ஆங்கிலேயர்களால் பம்பா என உச்சரிக்கப்பட்டு பின்பு பம்பாய் என்றானதாகக் கூறுவார்கள். பின்பு, அது மும்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

விஜயகாந்த், கமல், ரஜினி என தமிழ்நாட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த அனைவருக்கும் தாராவியில் ரசிகர்மன்றம் இருந்தது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும். பல ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் இந்த நடிகர் படத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை அங்கு இல்லை. அனைவருமே ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். சாதி, மதம் கடந்து அனைவரும் தமிழர்களாக ஒற்றுமையாக இருந்ததற்கு முக்கிய காரணம் பிற இனத்தவர்கள் நம்மை இந்த இடத்திலிருந்து விரட்டிவிடுவார்களோ என்ற எண்ணம்தான். மும்பையில் ஆளுநராகத் தமிழர் ஒருவர் இருந்தபோது தாராவியில் தமிழர்களுக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து அவரிடம் முறையிட்டதற்கு, 'பிழைக்க வந்த இடத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதானே' என்றார். இது மாதிரியான விஷயங்கள் எல்லாம்தான் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. 

 

மராட்டியப் பெண்களும் தமிழ்ப்பெண்கள் போலவேதான் இருப்பார்கள். அவர்கள் நம் பெண்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. மராட்டியக் கிராமப்புறங்களுக்குள் சென்றால் நம்முடைய அம்மா, அத்தையைப் பார்ப்பதுபோல இருக்கும். அவர்களுடைய விருந்தோம்பல் பண்பும் சிறப்பாக இருக்கும். ஆரம்பக்கட்டத்தில், தாராவி மக்கள் என்றால் தவறானவர்கள் என்ற எண்ணம் அங்கிருந்தவர்கள் மத்தியில் இருந்தது. நான் அங்கிருந்த காலகட்டத்திலேயே அந்த எண்ணத்தை உடைக்க இலக்கியவாதிகள், இளைஞர்கள் எனப் பலர் வேலை செய்தனர். உண்மையில் தாராவிக்காரர்கள் தவறானவர்கள் அல்ல; கொஞ்சம் கோபக்காரர்கள். ஒருமுறை ஓனர் திட்டினார் என்பதற்காக நடு ரோட்டிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, நீங்களே ஒட்டிட்டுப்போங்கடா என நம்முடைய ஆட்கள் எட்டு பேர் வேலையை விட்டுவிட்டு வந்தார்கள். தாராவி தமிழர்களை வேலைக்கு வைத்தால் இந்த மாதிரியான முரட்டுத்தனமான செயல்களைச் செய்வார்கள் என்ற பயம் அங்கிருந்த முதலாளிகளுக்கு இருந்தாலும் இதுவரை எந்த முதலாளியும் தாராவி தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறியதில்லை. 

 

அங்கிருந்த சாதாரண மக்களுக்கு மராட்டிய அரசோ காவல்துறையோ ஒருபோதும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தாராவிக்குள் ஒளிந்திருக்கிறார் என்றால் போலீஸ் வருவார்கள். மற்றபடி வேறெந்த காரணத்திற்காகவும் போலீஸ் உள்ளே வரமாட்டார்கள். இன்றைக்கு வட இந்தியர்களைப் பார்த்து நாம் கூறுகிறோமே அதுபோல இந்த தமிழனுங்க வந்துதான் நமக்கெல்லாம் வேலை கிடைக்காம போயிருச்சு என்று சில மராட்டியர்கள் பேசுவார்கள். இது மாதிரியான பேச்சு சாதாரண மக்கள் மத்தியில் இருந்தாலும் அரசியல்வாதிகளிடமோ அதிகாரிகளிடமோ இருக்காது. கம்யூனிஸ்ட் போராட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று நினைத்து முன்னரே கைது செய்து போலீஸ் நிலையத்தில் எங்களை இருக்க வைப்பார்கள். மறுநாள் வெளியே விட்டுவிடுவார்கள். எந்தவொரு போலீஸ் அதிகாரியும் நீங்கள் எதுக்கு போராட்டம் செய்றீங்க என்றெல்லாம் எங்களைப் பார்த்துக் கேட்டதில்லை. சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை மட்டுமே அவர்கள் செய்வார்கள். 

 

குஜராத்தில் இருந்து ஒரு தொழிலதிபர் வருகிறான் என்றால் அவன் நண்பர்கள் அனைவரும் நகைக்கடை வைப்பார்கள். இங்கு தமிழ்நாட்டில் இருந்து நாடார் ஒருவர் போகிறார் என்றால் அங்கு சென்று மளிகைக்கடைதான் வைப்பார். தாராவி தமிழர்களோ மாடுங்கா தமிழர்களோ தொழில்ரீதியாக அங்கு செல்லவில்லை. மாதச்சம்பளத்தை நோக்கித்தான் ஆரம்பத்திலிருந்தே சென்றுகொண்டிருந்தார். குஜராத்தியர்கள், பார்சியினரெல்லாம் தொழில் செய்யவேண்டும் என்ற முடிவோடுதான் அங்கு வந்தார்கள். ஆனால், பெரும்பாலான தமிழர்களிடம் கூலிக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. தாராவிக்கு சென்ற தமிழர்களின் அதிகபட்ச ஆசை டாக்சி, ஆட்டோ வாங்கவேண்டும் என்பதாகவே இருந்தது. இதுதான் தமிழர்கள் அங்கு பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

 

 

Next Story

"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! தாராவி கதைகள் #7

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியின் தற்போதைய நிலை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

ஒரு காலத்தில் 45 பள்ளிகளாக இருந்த தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது 20 பள்ளிகளாக குறைந்துவிட்டன. தாராவியில் இருந்த 2 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. பம்பாயில் வசிக்கும் நம் குழந்தைகள் எதற்குத் தமிழ் படிக்க வேண்டுமென்று நம் ஆட்கள் நினைக்க ஆரம்பித்ததன் விளைவுதான் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதற்கு காரணம். தாராவி என்பது தமிழர்களின் கோட்டை, தாராவி என்பது இன்னொரு தமிழ்நாடு என்ற பிம்பம் ஏறக்குறைய 90 விழுக்காடு நொறுங்கிவிட்டது. 

 

80களில் ஒலிம்பிக் நேரத்தில் கலர் டிவியை இலவசமாக இறக்குமதி செய்ய அனுமதி இருந்தது. அதற்கு முன்பு தாராவி பகுதியில் கலர் டிவி கிடையாது. சில குடிசைகளில் 60 எம்.எம் வெள்ளைத் திரையில் சினிமா ஓட்டுவார்கள். அதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் எனக் கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள். சினிமா பார்க்க வேண்டுமென்றால் அங்குதான் பார்க்க வேண்டும். 10க்கும் மேற்பட்ட குடிசைகளில் இதற்கான வசதி இருந்தது. இதை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஏதாவது ரௌடியாகத்தான் இருப்பார்கள். 3 மணிக்கு ஒரு சினிமா, 6 மணிக்கு ஒரு சினிமா, இரவு 9 மணிக்கு ஒரு சினிமா போடுவார்கள். இதில், 9 மணி சினிமா என்பது ப்ளூ ஃபிலிம்மாக இருக்கும். இதில், பெண்களுக்கு அனுமதி கிடையாது. இது மாதிரியான கலாச்சார சீர்கேடு நிகழ்வுகள் நடப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள். இதில் கிடைக்கும் வருமானத்தில் போலீசாருக்கும் ஒரு பங்கு செல்லும். சில நேரங்களில் மேலதிகாரி அழுத்தம் காரணமாக ரெய்டு நடத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்படும். அந்த நேரங்களில் ரெய்டு வரும் விஷயத்தை முன்கூட்டியே இவர்களிடம் தெரிவித்துவிடுவார்கள். 

 

50 பேர் கூடி ப்ளூ ஃபிலிம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இதனால் தாராவி பகுதிக்குள் நிறைய வன்முறைகள் நடந்தன. ஒருகட்டத்தில் இதை இழுத்து மூட வேண்டுமென பெண்களே போராட ஆரம்பித்துவிட்டனர். அதுபோக தாராவி தமிழர்களுக்குப் பெரிய சிக்கல், தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் இருந்தது. தமிழ்நாட்டில் ஏதாவது கொலை செய்துவிட்டு தாராவி பகுதிக்குள் வந்து பதுங்கிக்கொள்வார்கள். அப்படி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கென்றே அங்கு ஒரு கூட்டம் இருந்தது. இதனால், அடிக்கடி தாராவி பகுதிக்குள் போலீசார் வந்துசென்றனர். படம் பார்ப்பது, ரம்மி விளையாடுவது மாதிரியான பொழுதுபோக்குகள் மட்டுமே அங்கிருந்த மக்களுக்கு இருந்தன.

 

அதைத் தவிர்த்து, இலக்கியக் கூட்ட விழா நடந்தாலும் பெரும்பாலான மக்கள் அதில் பங்கெடுத்துக்கொள்வதில்லை. புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கக் கூடிய ஆட்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருந்தாலும் வெறும் 20, 30 ஆட்கள் மட்டுமே இலக்கியக் கூட்டங்களில் வந்து நேரடியாகக் கலந்துகொள்வார்கள். அதுபோக அரசியல் ரீதியான பட்டிமன்றங்கள் நடைபெறும். திமுகவினர் வந்தால் ஜெயலலிதா அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா என தலைப்பு வைத்து நடத்துவார்கள். அதுவே அதிமுகவினர் வந்தால் கருணாநிதி அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா எனத் தலைப்பு வைத்து நடத்துவார்கள். எங்களுக்கு இது சரியாகப்படவில்லை. ஒருமுறை இதுமாதிரியான பட்டிமன்ற நிகழ்வுக்கு வந்தவர்களிடம் அரசியல் பேச வேண்டாம்; அதற்குப் பதிலாக திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுங்கள் எனக் கூறினோம். முதலில் அவர்கள் தயங்கினாலும் பிறகு சம்மதித்துவிட்டனர்.

 

அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, 'உண்மையோ பொய்யோ இதுவரை ஒரு தலைவனை தூற்றியோ புகழ்ந்தோதான் பேசியிருக்கிறோம். முதல்முறையாக திருக்குறள் பற்றி பேசுகிறோம் என விழாவிற்கு வந்த மூவருமே கண்கலங்கிவிட்டனர். அரசியல் பட்டிமன்றங்கள்தான் இப்படி ஆபாசமாக நடக்குமேயொழிய, இலக்கிய பட்டிமன்றங்கள் மிகக் கண்ணியமான முறையில் நடக்கும். சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்கள் என்றால் கண்ணகிக்கும் மாதவிக்கும் புகழ் பரப்பக்கூடிய அளவிலேயே விவாதங்கள் நடைபெறும். அந்த மாதிரியான தலைப்புகள்தான் தேர்ந்தெடுக்கப்படும். தற்போது இலக்கியக் கூட்டங்கள் எதுவும் அங்கு நடப்பதில்லை. 

 

அன்று பெரிய தலைவர்களாக இருந்த ஆட்களின் பெயர்களைக்கூட இன்றைய ஆட்கள் மறந்துவிட்டனர். தாராவி பற்றி தமிழ் சினிமாவில் கூறியதில் எதுவும் உண்மையில்லை. 'நாயகன்', 'காலா' படங்களில் காட்டியதுபோல எந்தச் சம்பவங்களும் அங்கு நடைபெறவில்லை. தற்போது வசிக்கும் இடத்தை விற்றுவிட்டு 30 லட்சம், 40 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு புறநகர் பகுதியில் சென்று வசதியாக வாழலாம் என்று நினைத்துதான் தாராவியில் இருந்து தமிழர்கள் வெளியேறத்தொடங்கினார்கள். மராட்டிய அரசோ, மாநகராட்சியோ நம் மக்களைத் துரத்தவில்லை. சினிமாவிற்காகத் தமிழர்கள் அவர்களுக்கு கீழே அடிமையாக இருந்ததுபோல காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்! தாராவி கதைகள் #6