Skip to main content

இந்துவா முஸ்லீமா எனக் கண்டறிய வேட்டியை உருவினார்கள்... தாராவி கலவரம் குறித்துப் பகிரும் ஆறாவயல் பெரியய்யா! தாராவி கதைகள் #3

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியில் நடைபெற்ற மதக்கலவரம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தாராவியிலும் மதக்கலவரம் வெடித்தது. அந்த சம்பவம் நடந்து ஒருமாத காலம் நிறைவடைந்திருந்த நிலையில், மிகப்பெரிய கலவரம் தாராவிக்குள் உண்டானது. அதுகுறித்து நான் எழுதிய ஒரு கவிதை பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அந்தக் கவிதையில் இடம்பெற்றிருந்த வரிகளையும், அந்த வரிகளை நான் எழுதியதற்கான காரணத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

 

'தமிழில் சிந்திக்கும் எனக்கு இன்னுமொரு பெரும்பொழுது தாராவியில் இருக்குமா... ஆடை உரித்து மதம் பார்த்து சங்கறுத்த ஆயுதம் ஒன்று என் வீட்டிலும் இருக்கிறதே'. அங்கு இந்து, முஸ்லீம் கலவரம் வெடித்தவுடன் இரு தரப்புமே மற்றவர்கள் வேட்டியையும், கால்சட்டையையும் உருவிப்பார்த்து, அவர்களது மதத்தை உறுதிசெய்துவிட்டு வெட்ட ஆரம்பித்தார்கள். பலபேர் இதில் காயம்பட்டர்கள். இட்லி விற்ற ஒரு சிறுவனை இதேபோல ஆடையுருவிப் பார்த்துக் கொலைசெய்து 90 அடி ரோட்டில் வீசிவிட்டுச் சென்றனர். மொத்தமாக இதில் இறந்தது 8 பேர்தான் என்றாலும் அங்கிருந்த மக்கள் மத்தியில் இது ஏற்படுத்திருந்த பீதி மிகவும் கொடூரமாக இருந்தது. அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. 

 

'இடம்பிடிக்க குடி கொளுத்திய தீக்கோல் ஒன்று என் வீட்டிலும் இருக்கிறதே'. அங்கிருந்த குடிசைகளுக்குத் தீவைத்து, அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குடிசையைக் கொளுத்தினார்கள். கொளுத்தியவனும் தமிழன்தான். இந்து, முஸ்லீம் என இரு தரப்புகளிலும் தமிழர்கள் இருந்தார்கள். 'கொள்ளையடிக்கப்பட்ட கடையரிசி என் வீட்டு உலையிலும் நாறியதே'. அந்தக் கொடூரமான கலவரங்களுக்கு மத்தியில் கடையில் இருந்த அரிசி, பருப்புகளெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. அந்தக் கடையும் தமிழனுடையதே; அங்குள்ள பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றவனும் தமிழனே. 144 தடை உத்தரவு போடப்பட்டு ராணுவம் அங்கு குவிக்கப்பட்டிருந்தது. அன்றைய இரவு நான், எனது தோழர்கள் அனைவரும் வேலை முடித்துவிட்டுத் திரும்பி வந்தோம். எங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே தனியாக இருப்பார்கள் எனக் கூறியவுடன் தாராவிக்குள் செல்ல எங்களை அனுமதித்தனர். நடந்து போகக்கூடாது எனக் கூறி முட்டிபோட்டுக்கொண்டே செல்லச் சொன்னார்கள். நானும் உடனிருந்த தோழர்களும் முக்கால் கி.மீ தூரம் முழங்காலிட்டுக்கொண்டே சென்றோம்.    

 

'என் எதிரில் எரிந்த தீயில் வழிந்த குருதியில் மரணம் பொங்கிய அக்கணத்தில் இதற்கான கவிதை விழி பிதுங்கி விரிந்தபோது என்னிடத்தில் இருந்திருக்கவில்லை பேனாவும் காகிதமும்'. இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்து ஓராண்டுகள் கடந்த பிறகே இந்தக் கவிதையை எழுதினேன். முட்டி போட்டுக்கொண்டு சென்ற அல்லது வீதியில் அந்தச் சிறுவன் வெட்டுப்பட்டுக் கிடந்த சூட்டில் இந்தக் கவிதையை எழுதியிருந்தால் வரிகள் இன்னும் வலிமையாக இருந்திருக்கும். 'சொந்த மண்ணில் ரத்தத்திலும் நெருப்பிலும் நீந்திவந்து உயிர் பிழைத்தும் என்னால் முடியவில்லையே அனலோடு கவிதை படைக்க... அச்சத்தை நக்கித்துடைத்து கருமூச்சு குமிழும் தீயின் நாக்கை திராவகக் காப்பை, கண்ணாடித் துகளை, வெட்டரிவாளை, விசம்சூடி விழிபிதுங்கும் கத்தி முனையை ஏற்பதும் எதிர்ப்பதும் தாராவிக்குப் புதிய அனுபவமல்ல'. ஒருத்தனை கத்தியால் குத்திக் கொல்ல நினைத்தார்கள் என்றால் விஷம் தடவித்தான் குத்துவார்கள். தெருக்களில் ரத்தம் சிந்திக்கிடப்பது, கண்ணாடிகள் நொறுங்கிக்கிடப்பதெல்லாம் அங்கு சாதாரணம். சாதிக்கலவரங்கள், மதக்கலவரங்கள், களவாணிப்பயல்களுக்கு இடையேயான மோதல்கள் எனப் பலவற்றை பார்த்துப் பழகிவிட்டார்கள் அந்த மக்கள்.

 

dharavi

 

'இடைவிடாத ஊரடங்கின் இடிபாடுகளில் சிக்கித்தவிக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் அன்னை தாராவிக்கு கொடியணி வகுத்து குறிப்பார்க்கும் அரசாங்கத் துப்பாக்கி சனியன்கள் பயங்கொடுக்கின்றன திண்ண; கவலை கொடுக்கின்றன அருந்த'. அங்கு நடக்கிற பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசாரை வந்து குவிப்பார்கள். பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவரவே அவர்கள் வந்திருந்தாலும் கலவரத்தில் நம்மையும் சுட்டுவிடுவார்களோ என அச்சமாக இருக்கும். 'தப்பாமல் ஊறிப்பாயும் உப்பு, மஞ்சு முட்டும் சாளரங்கள், ஆலைச் சங்கொலியை பஞ்சால் அடைத்தாலும் தப்பாமல் ஊறிப்பாயும் தப்பு'. அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி யூனியன் உட்பட எல்லா யூனியன்களும் உங்களுக்கு நாங்கள் போனஸ் வாங்கித் தருகிறோம் எனக் கூறி அங்கிருந்தவர்களைப் போராட வைத்தார்கள். கடைசியில் அங்கிருந்த டெக்ஸ்டைல்ஸ் அனைத்தும் குஜராத்திற்குச் சென்றுவிட்டது. ஒவ்வொரு கம்பெனியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை பார்த்தார்கள். சில கம்பெனிகளில் 7 ஆயிரம் தமிழர்கள்வரை வேலை பார்த்தார்கள். 80களிலேயே ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கிய தமிழர்களும் அங்கு இருந்தனர். இந்தக் கம்பெனிகள் எல்லாம் மூடப்பட்டதால் வெறும் 15 ரூபாய் தினக்கூலிக்காக நம்முடைய ஆட்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.  

 

'இந்த நேரத்திலும்கூட இந்த உப்பளத்தில் கணபதி முளைக்கிறார்; கரகாட்டம் பார்க்கிறார்; கரைந்திடப்போகிறார்'. இவ்வளவு நெருக்கடியான வாழ்க்கைக்கு மத்தியிலும் கணபதி வழிபாடு சிறப்பாக நடைபெறும். மாடுங்காவில் வரதா பாய் தரப்பினர், கணேசர் கோவிலில் ஆதிதிராவிடர்கள், ட்ரான்சிட் கேம்பில் நாடார்கள், கல்யாணிவாடியில் முக்குலத்தோர் என வெகு விமரிசையாக கணபதி விழா நடக்கும். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் இயேசு முளைக்கிறார்; ஏற்பாடு ஜெபிக்கிறார். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் அல்லா முளைக்கிறார்; அருளாளர் ஆகிறார்'. கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ், இஸ்லாமியர்களின் ரம்ஜான் என எல்லா மதப்பண்டிகைகளும் அங்கு களைகட்டும். ஆனால், இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விழா கொண்டுவதற்கான வாய்ப்பே அங்கு அமையவில்லை.

 

தானாகவே முளைக்கிறது நகம்; பிணங்களைச் சுரண்டியும், போதையை அளந்தும், வெட்டமுடியாமல் வீங்கிப் பெருக்கிறது. இந்த சாமிகள் எல்லாம் அந்தந்த மதங்களுக்கானது. அங்கு தானாக முளைத்த ஒன்று என்றால் அது ரௌடிசம். 'உனக்கு காவல் நானேநானே என கிரீடம் பூசிக்கொண்டு அறைக்குள் நுழைகிறது; அச்சம் உள்ளிருக்கும் என் அறைக்குள் எல்லாம் அச்சமின்றி நுழைகின்றன'. நாங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு என்றுகூறி அவர்களது சுயநலத்திற்காக சாதிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களைத் தனிமைப்படுத்தும் வேலைகளும் அங்கு நடந்தன.