ஓய்வு முடிவை திரும்ப பெற்று பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என பிசிசிஐக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் கடிதம் எழுதியுள்ளார்.
ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடி பல முக்கியமான தொடர்களை வெல்வதில் பெரிய பங்காற்றியிருக்கிறார். குறிப்பாக 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் யுவராஜ்சிங் பங்கு அளப்பரியது. அந்த தொடரில் தொடர் நாயகன் விருது யுவராஜ்சிங்கிற்கு வழங்கப்பட்டது. அதன் பின்பு எதிர்பாராத விதமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். இளம் வீரர்களின் தொடர்ச்சியான வருகையால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும் அணியில் அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. அதனையடுத்து கடந்த ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சமீபத்தில் யுவராஜ்சிங் பஞ்சாப் அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவரது பேட்டிங் திறனைக் கண்டு, பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் புனீட் பாலி யுவராஜ்சிங் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும். அதன்மூலம் இளம் வீரர்களை அவரால் தயார்படுத்த முடியும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளையடுத்து தற்போது யுவராஜ் சிங் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு இந்த கடிதத்தினை எழுதியுள்ளார்.