Skip to main content

ஓய்வு முடிவு வாபஸ்... பஞ்சாப் அணிக்காகக் களமிறங்கும் யுவராஜ் சிங்! 

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

yuvraj singh

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் யுவராஜ் சிங், கடந்தாண்டு ஓய்வு பெற்றார். சர்வதேச மற்றும் இந்தியாவின் உள்ளூர்ப் போட்டிகளிலும் விடைபெற்ற அவர், வெளிநாட்டு லீக் போட்டிகளில் மட்டும் ஆடிவந்தார்.

 

இந்தநிலையில், பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியம், யுவராஜ் சிங்கிடம், பஞ்சாப் அணிக்காக ஆடுமாறும், பஞ்சாப் அணி வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட யுவராஜ் சிங், மீண்டும் தன்னை பஞ்சாப் அணிக்காக ஆட அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குக் கடிதம் எழுதினார்.

 

ஓய்வு முடிவிலிருந்து வெளியில் வருவது குறித்து பேசிய யுவராஜ் சிங், பஞ்சாப் மாநில அணிக்காக கோப்பையை வெல்லவேண்டும் என்ற விருப்பமே ஓய்வு முடிவில் மாற்றத்திற்கான காரணம் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், 'சையத் முஷ்டாக் அலி ட்ரோஃபி'க்கான பஞ்சாப் அணியின் 30 பேர்கொண்ட உத்தேச அணியில் யுவராஜ் சிங் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம், யுவராஜ் மீண்டும் பஞ்சாப் அணைக்காக விளையாடியது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம், உள்ளூர்ப் போட்டியில் ஆட அனுமதி அளித்துவிட்டால், ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை, யுவராஜின் அதிரடியைப் பார்க்கலாம்.

 

சூதாட்டப் புகாரில் தடைவிதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, கேரள மாநில அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

yuvraj singh with father yograj joins kamal in indian 2 movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரு வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த வாரம் ஆர்.சி 15 படப்பிடிப்பையும் ஷங்கர் படமாக்கி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (01.11.2022) தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் நடிகருமான யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை யோக்ராஜ் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் எல்லா ஹீரோக்களின் மேலும் பெரிய மரியாதை உள்ளது. என்னை மேலும் அழகாக்கிய ஒப்பனையாளர்களுக்கு நன்றி. லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

யோக்ராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆறு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். பின்பு கிரிக்கெட்டிலிருந்து விலகி பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

இம்மாத இறுதியில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஒரே அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங்!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

VIRU YUVI

 

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் புதிய கிரிக்கெட் தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல்  சீசன், வரும் 20 ஆம் தேதி ஓமன் நாட்டில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதல் சீசனில் இந்தியா சார்பாக ஒரு அணியும், ஆசியா சார்பாக ஒரு அணியும், பிற நாடுகளை சேர்ந்த வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியும் பங்கேற்கவுள்ளன.

 

இந்த முதல் சீசனில், இந்திய சார்பாக பங்கேற்கும் அணிக்கு இந்திய மகாராஜா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணிக்காக இந்திய ஜாம்பவான்கள் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் விளையாடவுள்ளனர். இவர்களைத் தவிர இந்திய மகாராஜா அணியில், இர்பான் பதான், யூசுப் பதான், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, நமன் ஓஜா, மன்பிரீத் கோனி, ஹேமங் பதானி, வேணுகோபால் ராவ், முனாஃப் படேல், சஞ்சய் பங்கர், நயன் மோங்கியா மற்றும் அமித் பண்டாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அதேபோல் ஆசியா சார்பாக களமிறங்கவுள்ள அணிக்கு ஆசியா லயன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணியில் சோயிப் அக்தர், ஷாகித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், கம்ரான் அக்மல், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதரனா, திலகரத்ன தில்ஷான், அசார் மஹ்மூத், உபுல் தரங்கா, மிஸ்பா உல்- முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது யூசுப் மற்றும் உமர் குல் ஆகிய இலங்கை பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர். பிற நாடுகளை சேர்ந்த ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணியின் பெயரும், அதில் இடம்பெறவுள்ள வீரர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.