Skip to main content

"சச்சினை தோளில் சுமந்தது சிறந்த தருணம்" - கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் யூசுப் பதான்!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

yusuf pathan

 

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரும், ஆல்ரவுண்டருமான யூசுப் பதான், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இன்று ஓய்வை அறிவித்தார். இந்தியாவிற்காக யூசுப் பதான், 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையடியுள்ளார். 46 சர்வதேச விக்கெட்டுகளையும் யூசுப் பதான் வீழ்த்தியுள்ளார். மேலும், உலகக் கோப்பையை வென்ற இந்திய இருபது ஓவர் அணியிலும், ஒருநாள் அணியிலும் யூசுப் பதான் அங்கம் வகித்தார்.

 

மேலும் யூசுப் பதான், 12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 37 பந்துகளில் இவர் அடித்த சதமே ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிவேக சதமாகும். அதுமட்டுமின்றி ஐபிஎல்லில் 3,204 ரன்கள் எடுத்துள்ளதோடு, 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் கோப்பையை, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளோடு இணைந்து வென்றுள்ளார்.

 

இதுகுறித்து அவர், "இந்தியாவிற்காக இரண்டு உலகக் கோப்பை போட்டிகளை வென்றதும், சச்சினை தோளில் சுமந்ததும் என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணங்கள். நான் சர்வதேசப் போட்டிகளில் தோனி தலைமையிலும், ஐபிஎல் போட்டிகளில் வார்னே தலைமையிலும், ராஞ்சியில் ஜேக்கப் மார்ட்டின் தலைமையிலும் அறிமுகமானேன். என்னை நம்பியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கொல்கத்தா அணியில், கம்பிரோடு இரண்டு முறை கோப்பையை வென்றோம் அவருக்கு நன்றி. மேலும் எனது உயர்வு, தாழ்வுகளில் என்னோடு இருந்த, எனது தம்பியும், எனது முதுகெலும்புமான இர்பான் பாதனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.