Skip to main content

கிரிக்கெட் வீரர்களுக்கு பீஃப் கிடையாது; சர்ச்சையைக் கிளப்பிய உலகக் கோப்பை மெனு கார்டு!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

World Cup cricketers have no beef

 

உலகக் கோப்பையில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கென்று தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மாட்டிறைச்சி இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களும் நேற்று முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் அனைத்து அணிகளும் இந்தியா வந்திறங்கி ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல, பாகிஸ்தான் அணியும் புதன்கிழமை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் இந்தியா வந்து சேர்ந்தது. உலகக் கோப்பை போட்டிகள் நிச்சயம் வேறொரு நாட்டில் நடக்கும் என்பதால், அணிகளுக்கு ஏற்ற உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு போட்டியைத் தலைமையேற்று நடத்தும் நாட்டிடம் உள்ளது. அதேசமயம், சில வீரர்கள் தங்களுக்கு உகந்த உணவுகளை உண்பதற்குத் தனியாக சமையல்காரர்களை அழைத்து வருவதும் உண்டு. ஏனென்றால், விளையாட்டு வீரர்களுக்கு உணவு என்பது மிக அத்தியாவசியமான ஒன்று. இதற்கென மெனக்கெட்டு உணவு வகைகளைத் தயார் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெறுவதுண்டு. 

 

இந்த நிலையில் தான் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணியினருக்கும் மாட்டிறைச்சி(பீஃப்) சமைத்து பரிமாறப்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த தொடர் முழுதும் சிக்கனும், மட்டனும், மீனும் தான் வழங்கப்பட உள்ளது. இந்த விதிமுறை பாகிஸ்தான் அணியினருக்கும் உண்டு எனவும் தெரிகிறது. கூடுதலாக, பட்டர் சிக்கனும், சிக்கன் பிரியாணியும் தொடர் முடியும் வரை கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், நிச்சயம் மாட்டிறைச்சி எந்த அணியினருக்கும் இருக்காது எனத் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து, பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகையில், “இந்தியா நடத்தும் உலகக் கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் மாட்டிறைச்சி கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் அணியின் உணவு அட்டவணை அவர்களின் தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மெனுக்கள் தயாராகியுள்ளது. அதில், மட்டன் சாப்ஸ், சுவையான மட்டன் இறைச்சி, பட்டர் சிக்கன் மற்றும் தேவையான புரத ஊக்கத்தை வழங்க வறுத்த மீன் என சுவையான உணவுகள் உள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ..” - இஸ்லாமிய மாணவியை டார்ச்சர் செய்த ஆசிரியர்கள்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

islam student torchered by teacher for beef in covai

 

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்  ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்து பள்ளி ஆசிரியை அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் மனு ஒன்றை அளித்தார்.

 

அவர் அளித்த அந்த மனுவில், ‘பள்ளி ஆசிரியை அபிநயா, அந்த மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளார்கள். அப்போது, இது குறித்து அவரிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியை அபிநயா என்பவரும், ஆசிரியர் ராஜ்குமார் என்பவரும், தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டது குறித்து மாணவியிடம் கேள்விகள் கேட்டு, கன்னத்தில் அறைந்து மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ, அப்ப உனக்கு திமிர் அதிகமாகத் தான் இருக்கும் எனக் கூறி சக மாணவிகள் மத்தியில் மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் அனைவரின் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். ஆகையால், மாணவியின் படிப்புக்கு இந்த ஆசிரியர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் இருப்பதாக கூறி’ தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறியதாவது, “இங்கு தொடர்ந்து எனது குழந்தையிடம் மாட்டுக்கறி சாப்பிடுவியா? அப்ப திமிர் பிடித்த மாதிரி தான் நடந்து கொள்வீர்கள் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பி ஆசிரியர்கள் டார்ச்சர் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த போது, அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இருப்பினும், மீண்டும் இரண்டாவது முறையாக தலைமை ஆசிரியரிடம் அணுகிய போதும் கூட அப்பொழுதும் சரியான பதில் இல்லை. அதன் பின், காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்த போது எங்களை சமாதானப்படுத்தி, இது போல் மீண்டும் நடக்காது என்றும் மீண்டும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புமாறும் கூறினர்.

 

அதன் பேரில், மீண்டும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய போதும் அதே மாதிரியான டார்ச்சர்களை அந்த ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தான் இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்திருக்கிறோம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து,  பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகல்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Babar Azam steps down as captain

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளன.

 

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் களம் இறங்கியது. அதில் 9 லீக் போட்டிகளில் களம் இறங்கி 4 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு கூட பாகிஸ்தான் அணி முன்னேற முடியவில்லை. அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது, அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட்டுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. பாகிஸ்தான் அணிக்கு புதிதாக வரும் கேப்டனுக்கு பேட்ஸ்மேனாக எனது முழு அர்ப்பணிப்பையும் வழங்குவேன் எனவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பு வகித்து வந்த பாபர் அசாம் ஒரு நாள் போட்டிகளில் 42 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 26 வெற்றிகளும், 14 தோல்விகளும் பெற்றுள்ளார். ஒரு ஆட்டம் டையிலும், ஒரு ஆட்டம் முடிவில்லாமலும் போனது. டெஸ்ட் போட்டிகளில் 20 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 10 வெற்றிகளும், 6 தோல்விகளும் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் 71 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகித்து அதில் 42 வெற்றிகளும், 22 தோல்விகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்