உலகக்கோப்பை கிரிக்கெட் 2023இன் 39 ஆவது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (07.11.2023) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. குர்பாஸ் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து இப்ராஹிமுடன் இணைந்த ரஹ்மத் நிதானமாக ஆடினார். 30 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஷஹிதி 26, அஸ்மத்துல்லா 22, நபி 12 என வீழ்ந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறு பக்கம் இப்ராஹிம் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த ரஷித் கானின் அதிரடியான 35 ரன்கள் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடி சதமடித்த இப்ராஹிம் 129 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெடுகளும், ஸ்டார்க், ஜம்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், வார்னர் 18 ரன்களிலும் வெளியேறினர். மார்ஸ் 24, இங்லிஸ் 0, லபுசேன் 14, ஸ்டாய்னிஸ் 6, ஸ்டார்க் 3 என அவுட் ஆக 91-7 என தடுமாறியது. அதன்பின் இணைந்த மேக்ஸ்வெல், கேப்டன் கம்மின்ஸ் இணை பொறுமையாக ஆடத் தொடங்கியது. கொஞ்ச நேரம் பொறுமை காத்த மேக்ஸ்வெல், பின் தனது அதிரடியை காட்டத் தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர் சதத்தைக் கடந்தார். கம்மின்ஸ் அவருக்கு ரொடேட் செய்து தரும் வேலையை மட்டும் செய்தார். தொடர்ந்து ஆடிய மேக்ஸ்வெல்லுக்கு தொடையில் ஹார்ம்ஸ்டிரிங் ஏற்பட்டது. அதையும் பொறுத்துக் கொண்டு ஆடினார்.
ஒரு சமயத்தில் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அணியின் வெற்றியை ஒன்றே இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கினார். வெறி கொண்டு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷஹிதி எவ்வளவோ பவுலர்களை மாற்றி, மாற்றி பார்த்தும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து மிரட்டிய மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டில் தன் முதல் இரட்டை சதத்தை அடித்தார். ஒரு ஆஸ்திரேலிய வீரரால் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன் ஷேன் வாட்சன் எடுத்த 185 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 201 ரன்கள் குவித்து தனி ஆளாக வெற்றியை ஆப்கானிஸ்தானிடமிருந்து பறித்தார். அவருக்கு துணை நின்ற கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த அபார வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. 201 ரன்கள் அடித்து வெற்றி தேடித் தந்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- வெ.அருண்குமார்