இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி, முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆண்டிகுவாவில் கடந்த 22ம் தேதி, முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களும், மேற்கு இந்திய தீவுகள் 222 ரன்களும் எடுத்திருந்தன.
இதையடுத்து, 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இந்த இன்னிங்ஸினும் அபாரமாக விளையாடிய ரஹானே, சதம் விளாசினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கும் பத்தாவது சதம் இதுவாகும். சிறப்பாக விளையாடிய அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் வெளுத்துக்கட்டிய ஆல்ரவுண்டர் ஹனுமா விஹாரி 93 ரன்களில் ஆட்டமிழந்து, முதல் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கோஹ்லி, 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி, 343 ரன்களில் ஆட்டத்தை முடித்துக்கொண்டார்.
அப்போது, ரவீந்திர ஜடேஜா 1 ரன்னுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மேற்கு இந்திய தீவுகள் அணி தரப்பில் ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது, மேற்கு இந்திய தீவுகள்.
ஆரம்பத்தில் இருந்தே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. மூவரின் தாக்குதலால் ஒட்டுமொத்தமாக அந்த அணி நிலைகுலைந்து போனது. பும்ரா 8 ஓவர்கள் பந்துவீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷமி, 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரமே தாக்குப்பிடித்த மேற்கு இந்திய தீவுகள் 100 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்தியயா, மேற்கு இந்திய தீவுகளை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இமாலய வெற்றி பெற்றது.முதல் இன்னிங்ஸில் 81 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 102 ரன்களும் எடுத்த இந்திய அணி வீரர் ரஹானே, ஆட்டநாயகன் விருது பெற்றார்.
துளிகள்:
விராட் கோஹ்லி தலைமையில் இந்தியாவுக்கு வெளியே இதுவரை 26 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில் இதுவரை (இன்றைய போட்டியுடன் சேர்த்து) இந்திய அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன், சவுரவ் கங்குலி தலைமையில் அந்நிய மண்ணில் 28 போட்டிகளில் விளையாடி 11 ஆட்டங்களில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 8 ஓவர்கள் பந்துவீசினார். அதில் 4 ஓவர்கள் மெயிடன் ஓவர்களாக வீசியுள்ளதோடு, 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது டெஸ்ட் போட்டிகளில் அவருடைய சிறப்பான செயல்பாடாக பார்க்கப்படுகிறது. அவர் ஓவருக்கு 0.87 ரன்கள் என்ற அளவில் மிகச்சிக்கனமாக பந்து வீசி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதன் மூலம், அந்நிய மண்ணில் இந்திய அணி பெற்ற மிகப்பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இலங்கை அணியை (2017), அதன் சொந்த மண்ணில் 304 ரன்கள் வித்தியாசத்திலும், ஹெடிங்லேயில் நடந்த போட்டியில் (1986) இங்கிலாந்து அணியை 279 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்கடித்து உள்ளது.
உலகக்கோப்பை டெஸ்ட் போட்டித்தொடர் நடந்து வரும் நிலையில், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 60 புள்ளிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.