இங்கிலாந்து எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன் விராட் கோலி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் பின்வாங்கி இருக்கின்றன. 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சொதப்பிய விராட் கோலி, இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடியிருப்பதுதான் அதற்குக் காரணம்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் 149, 51 ரன்கள் அடித்த விராட் கோலி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நிதானமாகக் கையாண்டார். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலியை வீழ்த்த புதிய யுத்தியைக் கையாள இருப்பதாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ட்ரிவேர் பேலிசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதால், அவரை எங்களால் வீழ்த்த முடியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தையே கிடையாது. எனவே, இனிவரும் போட்டிகளில் கள யுத்தியை மாற்றிக்கொள்ள இருக்கிறோம். விராட் கோலிக்கு தரவேண்டிய நெருக்கடியை, அவரது அணியின் சக வீரர்களுக்கு தருவோம். ஏற்கெனவே எங்களது பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் அவர்கள், தற்போது காத்திருக்கும் கூடுதல் நெருக்கடியால் மேலும் திணறி விக்கெட்டுகளைப் பறிகொடுப்பார்கள். இதன்மூலம், அணியைத் தாங்கிக்கொள்ள வேண்டிய முழு நெருக்கடியும் கோலிக்கு சென்றுவிடும். அந்த நெருக்கடியைச் சுமக்கும் கோலியின் விக்கெட்டையும் வீழ்த்துவோம் எனப் பேசியுள்ளார்.