West indies Cricket player Bravo announced retired at cricket match

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக செயல்பட்டவர் டுவைன் பிராவோ. இவர், கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் போட்டியிலும், 2016இல் நடைபெற்ற ஐசிசி டி20 போட்டியிலும், சிறப்பாக விளையாடி தனது அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய வழிவகுந்திருந்தார்.

Advertisment

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த டுவைன் பிராவோவுக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இதே வேளையில், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். மேலும், 40 வயதிலும் ஆல் ரவுண்டராக செயல்பட்டு சிறப்பாக விளையாடி வந்த இவர், சர்வதேச போட்டிகளிலும், டி-20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த மேஜர் லீக் கிரிக்கெட் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடி வந்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து, ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். தொடர்ந்து, ஒவ்வொரு தொடர்களில் இருந்து ஓய்வை அறிவித்து வந்த பிராவோ, தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக நேற்று (26-09-24) கடைசி போட்டியில் விளையாடிய நிலையில், அவர் இந்த ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டில் இருந்து இன்று நான் விடைபெறுகிறேன். ஐந்து வயதிலிருந்தே, இதுதான் நான் விளையாட வேண்டிய விளையாட்டு என்று எனக்கு தெரியும். எனக்கு வேறு எதிலும் ஆர்வம் இல்லை, என் முழு வாழ்க்கையையும் இந்த கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்தேன். பதிலுக்கு, எனக்கும் என் குடும்பத்திற்கும் நான் கனவு கண்ட வாழ்க்கையை இந்த கிரிக்கெட் கொடுத்தது. அதற்காக, நான் எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஈடாகாது.

கிரிக்கெட் வீரராக இருபத்தி ஒரு வருடங்களில் பல உயர்வும், சில தாழ்வுகளும் நிறைந்த ஒரு நம்பமுடியாத பயணமாக இருந்தது. மிக முக்கியமாக, ஒவ்வொரு அடியிலும் நான் 100 சதவீதம் உழைப்பை கொடுத்ததால் என் கனவை என்னால் வாழ முடிந்தது. என் மனதில், தொடர்ந்து விளையாட வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் என் உடலால் இனி வலி, முறிவுகள் மற்றும் காயங்களைத் தாங்க முடியாது. எனவே, கனத்த இதயத்துடன், விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். இன்று, சாம்பியன் விடைபெறுகிறார். எனது ரசிகர்களுக்கு, பல ஆண்டுகளாக உங்கள் அசைக்க முடியாத அன்புக்கும், ஆதரவிற்கும் நான் ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு கசப்பானதாக இருந்தாலும், இந்த முடிவு பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இப்போது, ​​எனது அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

Advertisment

West indies Cricket player Bravo announced retired at cricket match

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கெளதம் கம்பீர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான நிலையில், புதிய ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில், சிறப்பாக விளையாடியும் 2024 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் பவுலிங் ஆலோசகராக செயல்பட்டு , சிஎஸ்கே ரசிகர்களை தன் பக்கம் கட்டிப்போட்ட பிராவோ, தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு தாவி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.