இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இம்மாதம் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து பிசிசிஐ, அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், கடந்த 15ஆம் தேதி இரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிபோட்டியின்போது, ராகுல் டிராவிட்டோடு பிசிசிஐ தலைவர் கங்குலியும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐயின் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
ராகுல் டிராவிட்டுக்கு 2 வருட ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்காக அவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றால், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பொறுப்பை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பொறுப்பை ஏற்க வி.வி.எஸ். லட்சுமணிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு வி.வி.எஸ். லட்சுமண் மறுத்துவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், லட்சுமண் மறுத்ததால், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பொறுப்பிற்கு வேறொரு நபரை பிசிசிஐ தேடிவருவதாகவும் தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள், இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்த நபரையே அந்தப் பொறுப்பிற்கு நியமிக்க பிசிசிஐ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளன.