நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் நடந்த இரண்டாது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் சதத்தினால் 250 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விஜய் சங்கர் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் விராட் கோலி, “விஜய் சங்கர் அல்லது கேதர் ஜாதவ்வை தான் 46-வது ஓவரை வீச வைக்கலாம் என நினைத்திருந்தேன். இதை தோனியிடம் கூறியபோது `வேண்டாம், பும்ரா அல்லது ஷமி வீசட்டும்' எனக் கூறிவிட்டார். இதையே ரோஹித் ஷர்மாவும் கூறினார். பும்ரா அல்லது ஷமி வீசினால் மேலும் சில விக்கெட் விழும்போது அணியின் வெற்றிக்கு உதவும் என ஐடியா கூறினர். இருவரும் நல்ல அனுபவம் உள்ளவர்கள். அவர்களிடம் பேசுவது நல்ல பலனைக் கொடுத்தது. இருவரும் ஆட்டத்தை நன்கு கணித்து வைத்திருந்தார்கள். அவர்கள் சொன்னது போலவே நடந்தது. பும்ரா 46-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். அதேபோல் விஜய் சங்கர் சரியான திசையில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிச்சயம் அவருக்கு இது ஒரு நல்ல ஆட்டமாக அமைந்திருக்கும். இதேபோல் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது” என்றார்.