இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. மனைவியிடம் விவாகரத்து, சூதாட்ட புகார்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய முகமது ஷமி, காயத்தாலும் சில ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். சூதாட்டப் புகார்களில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி, காயமும் முழுமையாக குணமடைந்து புத்துணர்ச்சியுடன் இந்திய அணிக்கு திரும்பினார். காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். சிறப்பான செயல்பாட்டின் காரணமாக உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார்.
முதல் நான்கு போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத முகமது ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இடம் பிடித்தார். உலக கோப்பையில் பங்கு பெற்ற முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி இந்தத் தொடரில் மட்டும் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒட்டு மொத்தமாக 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முக்கியமாக அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் எனும் புதிய சாதனை படைத்தார். இதனால் இவரை கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவரின் சாதனைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முகமது ஷமியின் சொந்த ஊரான சகஸ்பூர் அலிநகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சகஸ்பூர் அலிநகர் கிராமத்தில் மிகச் சிறிய அளவிலான ஒரு கிரிக்கெட் மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக, ஷமியின் கிராமம் அமைந்திருக்கும் அம்ரோஹா மாவட்டத்தின் ஆட்சியர் ராஜேஷ் தியாகி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.