இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு நிகரான பரபரப்புக் கொண்ட விஷயம் இந்தியாவில் வேறு இல்லை எனலாம். பாகிஸ்தான் வீரர்கள் பந்துவீச்சில் விக்கெட் விழுவதே அவமானமாக நினைக்கும் மக்களும் இருந்த அந்த காலகட்டத்தில் , போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடியிடம் வசைச் சொற்களை வாங்கிக்கொண்டே சச்சின் 98 ரன்கள் எடுத்து அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற ஒரு சம்பவமும் நடைபெற்றது. 2003ல் நடந்த இந்த போட்டியை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தற்போது நினைவு கூர்ந்துள்ளார் இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக்.
அவர் அந்த தனியார் நிகழ்ச்சியில் "சச்சின் எப்போதும் அவருக்கு ரன்னர் வைத்துக்கொள்ள மாட்டார். ஆனால் அவருக்கு தெரியும் 'நான் வந்தால் அவரைப்போல் ஓடுவேன்' என்பது. அப்பொழுது அங்கு எந்தவிதமான தவறான புரிதலுக்கும் இடம் இருக்காது.
பாகிஸ்தான் உடனான போட்டியில் அவருக்குத் தசைப் பிடிப்பு இருந்ததால் அவருக்கு ரன்னராக நான் ஓட வந்தேன். அப்போது பாகிஸ்தான் அணியின் அப்ரிடி அவரை அதிகம் வசை பாடினார். ஆனால் அவருக்கு, தான் கிரீஸில் இருப்பது முக்கியம் எனத் தெரிந்ததால் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். மேலும் அந்த சமயம் 'டாப் ஆர்டரை முற்றிலுமாக அழித்துவிடுவேன்' என அக்தர் பேசியது எனக்கு நினைவில் உள்ளது. ஆனால் அதை நானும் சச்சினும் அப்போது படிக்கவில்லை. இருந்தாலும் சச்சின் இன்னிங்சின் முதல் ஓவரிலேயே 18 ரன்கள் எடுத்து தக்க பதிலடி கொடுத்தார்" இவ்வாறு கூறினார்.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் சச்சின் அடித்து ஆடியதால் 45.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக சச்சின் 98 ரன்கள் எடுத்தார்.