8 ஆவது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
இதில் உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் அயர்லாந்து அணிகள் தங்களுடைய கடைசிப் போட்டியை விளையாடியது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்கம் முதலே மள மளவென விக்கெட்களை இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ப்ராண்டன் கிங் 62 ரன்களை எடுத்தார்.
இதன் பின் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் பால்பிரின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 17.3 ஓவர்களில் அயர்லாந்து அணி 1 விக்கெட்களை மட்டுமே இழந்து 150 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மேலும் சூப்பர் 12 சுற்றுக்கும் முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியுற்றதால் இருமுறை உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி நடப்பாண்டில் தகுதிச் சுற்றுடன் வெளியேறியது.
தகுதிச் சுற்றில் ஆடிய அணிகளில் தற்போது வரை ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.