ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஜோடி களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
போட்டியின் 7-ஆவது ஓவரின்போது மைதானத்துக்குள் நுழைந்த இரு ஆஸ்திரேலியர்கள் 'அதானிக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கடன் வழங்காதே' என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி ஸ்டேட் பேங்கிற்கு கோரிக்கை வைத்தனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. மைதானத்தின் பாதுகாவலர்கள் இருவரையும் அப்புறப்படுத்தியதையடுத்து, போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்ஸிலாந்து பகுதியில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்காக ஸ்டேட் பேங்கானது 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அதானி குழுமத்திற்கு கடனாக வழங்கவுள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் வேளையில், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு, போராட்டக்காரர்கள் கிரிக்கெட் போட்டியையும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்கான தளமாக்கியுள்ளனர்.