இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பான துவக்கம் தந்தனர். வழக்கம்போல அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அனுபவ வீரரான ஸ்ரேயாஸ் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் ருதுராஜ் உடன் இணைந்த ரிங்கு சிங் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் 32 ரன்களில் சங்கா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு ரிங்கு சிங்குடன் இணைந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஜித்தேஷ் ஷர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களான அக்சர் பட்டேல் மற்றும் தீபக்சகர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆஸி சார்பில் ட்வார்சுயிஸ் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் சங்கா தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிலிப்பே நிதானம் காட்ட, டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். பந்துகளை பௌண்டரிகளாக பறக்க விட்டார். ஆனால் இவர்கள் இணையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி புஷ்னோய் பிரித்தார். இவரது வந்தில் பிலிப்பே 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடியாக ஆடி வந்த ஹெட்டை அக்சர் பட்டேல் 31 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்களின் பென் 19 ரன்களிலும், ஹார்டி 8 ரன்களிலும், டிம் டேவிட் 19 ரன்களிலும், ஷார்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் கேப்டன் வேட் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 36 ரன்கள் எடுத்தார் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், தீபக் சகர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்று சூரியகுமார், ஒரு சிறந்த கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார். ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
- வெ.அருண்குமார்