
ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் 25வது லீக் ஆட்டம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் மலன், பேர்ஸ்டோ களமிறங்கினர். அதிரடியாக ஆடத் தொடங்கிய மலன் 28 ரன்களில் வீழ்ந்தார். பேர்ஸ்டோ 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் ஸ்டோக்ஸ் மட்டும் 43 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் வருவதும், பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் எடுத்தது.
பந்து வீச்சு, பீல்டிங் என எல்லாவற்றிலும் அசத்தியது இலங்கை அணி. குறிப்பாக இலங்கை வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பந்துவீச்சில் இலங்கை அணியின் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளும், அனுபவ மேத்யூஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளும் தீக்சனா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
157 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பெரேரா 4 ரன்களிலும் அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து தொடக்க ஆட்டக்காரர் நிசங்காவுடன் இணைந்த சமரவிக்ரமா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அரை சதம் கடந்து அணியை எளிதில் வெற்றி பெறச் செய்தனர். நிசங்கா 77 ரன்களும், சமரவிக்ரமா 65 ரன்களும் எடுத்து 25.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அரை சதம் எடுத்ததன் மூலம் இலங்கை வீரர் நிசங்கா, தொடர்ச்சியாக நான்கு அரை சதம் அடித்த வீரர் என்ற, முன்னாள் இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை சமன் செய்தார். அத்துடன் கடந்த நான்கு உலகக் கோப்பைகளாக ( 2007,2011,2015,2019)இங்கிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி,தொடர்ச்சியாக ஐந்தாவது முறையும் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.
லஹிரு குமாரா ஆட்டநாயகனாகத்தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இரண்டு வெற்றிகள் பெற்றுபுள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் அரையிறுதி ரேசில் நாங்களும் இருக்கிறோம் என்று இலங்கை அணி மற்ற அணிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
வே. அருண்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)