போராடிக்கிடைக்கும் தோல்வி கூட கொண்டாடப்பட வேண்டிய வெற்றிதான் என்பார் எம்.எஸ்.தோனி. நேற்றைய ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இதுவே நடந்தது.
2022ம் ஆண்டுக்கான ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகிறது. 6 அணிகள் இரு பிரிவுகளாக மோதும் இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்று நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்று சூப்பர் 4 சுற்றின் 3 வது ஆட்டமாக இந்தியாவும் இலங்கையும் மோதியது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சனாகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி தந்தது. கே.எல்.ராகுல் 6 ரன்களுக்கு தீக்சனா சுழலில் வெளியேறினார். கடந்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய கோலி ரன்கள் ஏதும் இன்றி போல்ட் ஆக 150 ரன்களாவது சாத்தியமா என்ற நிலை உருவானது. சூர்யகுமார் யாதவ் பொறுமையாக ரன்களை சேர்க்க ரோஹித் சர்மா இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தார். ரன்கள் மளமளவென உயர்ந்தது.
இந்நிலையில் 12வது ஓவரில் 72 ரன்களுக்கு கருணாத்ரனே பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 72 ரன்களுக்கு அவர் விளையாடிய 41 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளும் அடக்கம். பின் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை சேர்த்தது. இலங்கையின் சார்பில் மதுஷன்கா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிஷன்கா, மெண்டிஸ் இருவரும் வேகமாக ரன்களை சேர்த்தனர். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. 12வது ஓவரில் சுழல் மன்னன் சஹால் இரண்டு விக்கெட்களை வீழ்த்த இந்திய அணியின் தற்காலிக ஆசுவாசம் கொண்டனர். பின்னர் களமிறங்கிய மெண்டிஸ் மற்றும் ஹஸரங்கா மீண்டும் இந்திய அணி எழமுடியாதளவு ரன்களை சேர்த்தனர். இறுதி ஓவரில் ஒரு பந்து மீதம் இருக்க இலங்கை இலக்கை எட்டியது.
போராடி தோல்வி அடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா "நாங்கள் கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு அதிக ஆட்டங்களில் தோற்றத்தில்லை. இந்த மாதிரியான ஆட்டங்கள் தான் எங்களுக்கு கற்றுக்கொடுக்கும். கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியதற்கு அர்ஷிதீப் சிங்கிற்கு பாராட்டுகளை கொடுக்க வேண்டும்" என கூறினார்.
ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து இரு ஆட்டங்களில் தோல்வியுற்றது இதுவே முதல்முறை.