பல விளையாட்டுகளைப் போலவே மகளிர் கிரிக்கெட்டும் ஆண்கள் கிரிக்கெட்டின் நிழலில் மறைந்துவிட்டது. ஆனால் சமீப காலங்களாக மகளிர் கிரிக்கெட்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்பான்சர்ஸ், ஒளிபரப்பு, ஊடக வெளிச்சம், அதிகரித்து வரும் ரசிகர்கள் என மகளிர் கிரிக்கெட் முன்னேற்றம் கண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு பிரபலமான மகளிர் கிரிக்கெட்டர்கள். இன்று ஸ்மிர்தி மந்தனா, ஹர்மன்பிரீட் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, புனம் ராவுட், பூனம் யாதவ் என பட்டியல் தொடர்கிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சேவாக் என்று அழைக்கப்படுபவர் ஸ்மிர்தி மந்தனா. அணியின் தொடக்க ஆட்டக்காரரான இவர் ஐ.சி.சி. 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதை பெற்றுள்ளார். ரேச்சல் ஹேஹோ-ஃபிளின்ட் என்ற சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
22 வயதான ஸ்மிர்தி மந்தனா உலகளாவிய மகளிர் கிரிக்கெட்டில் பேட்டிங்கின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். இன்றைய பெண்கள் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான ஒருவர். ஆண் கிரிக்கெட்டர்களை கொண்டாடும் ஒரு நாட்டில் ‘பெண் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர்’ என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு குறுகிய காலத்தில் ஸ்மிர்தி மந்தனா கிரிக்கெட் துறையில் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்வில் காயங்களால் ஏற்றத்தாழ்வுகள் வந்த போதும் பாசிடிவ் எண்ணங்கள் மூலம் சாதித்து வருகிறார்.
கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் ஸ்மிர்தி மந்தனா. மூன்று வயதாக இருந்தபோதே மந்தனா கைகளில் ஒரு பிளாஸ்டிக் பேட் வைத்து விளையாடத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் தனது சகோதர் ஷ்ரவன் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடியதன் மூலம் கிரிக்கெட் மீது மந்தனாவிற்கு ஆர்வம் அதிகமானது. தனது ஒன்பது வயதில் மகாராஷ்டிராவின் அண்டர்-15 அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். பதினோரு வயதில் அவர் மகாராஷ்டிரா அண்டர்-19 அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ், ஒரு இரசாயன விற்பனையாளர். மந்தனாவின் கிரிக்கெட் நிகழ்ச்சியை கவனித்துக்கொள்கிறார். அவரது தாயார் மந்தனாவின் உணவு கட்டுப்பாடு, மற்றும் பிற அம்சங்களில் பொறுப்பாளராக உள்ளார். மேலும் அவரது சகோதரர் ஷர்வன் மந்தனாவுக்கு இன்றளவும் வலைபயிற்சிகளில் உதவி செய்து வருகிறார்.
மந்தனா 15 வயதாக இருந்தபோது கிரிக்கெட்டிற்கும், 10-வது பரீட்சைக்கும் இடையில் எதை தேர்வு செய்வது என்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். பின்னர் அவர் கிரிக்கெட்டைத் தேர்வுசெய்தார். இந்த கடினமான தேர்வில் அவரது தாயார் அவருக்கு ஆதரவளித்தார்.
உள்ளூர் போட்டிகளில் 150 பந்துகளில் 224 ரன்கள் எடுத்து, இரட்டை சதம் அடித்த முதல் இந்திய பெண் வீரர் என்ற சாதனையை ஸ்மிர்தி மந்தனா படைத்தார். 2014-ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் சர்வதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். இதுவரை 52 டி-20 போட்டிகளில் 1046 ரன்கள் எடுத்துள்ளார். 45 ஒருநாள் போட்டிகளில் 4 சதம் உட்பட 1707 ரன்கள் மற்றும் 40.64 சராசரி கொண்டுள்ளார்.
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகித்தார். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 மகளிர் உலக கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 178 ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 125.35. 2016-ஆம் ஆண்டு ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரர்கள் கொண்ட மகளிர் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் மந்தனா மட்டுமே. 2018-ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 669 ரன்கள், 66.90 சராசரி, அதிகபட்சமாக 135 ரன்கள் எடுத்துள்ளார். ஐசிசி மகளிருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடமும், டி-20 போட்டிகளில் 10-வது இடத்திலும் உள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் SENA என்று கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை மந்தனா படைத்துள்ளார். சர்வதேச அளவில் க்ளைர் டெய்லருக்கு பிறகு இந்த சாதனையை படைத்த இரண்டாவது வீராங்கனை.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிருக்கான பிக் பேஷ் தொடரில் 2016-ஆம் ஆண்டு பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். 2018-ஆம் ஆண்டு ஹோபர்ட் ஹரிகன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். இந்திய அணியிலிருந்து பிக் பேஷ் தொடரில் விளையாடும் வீரர் என்ற பெருமையும் உண்டு. இதுவரை பிக் பேஷ் தொடரில் 25 போட்டிகளில் 407 ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.62. இளம் வயதில் பல சாதனைகளை படைத்துவரும் மந்தனா, விளையாட்டு துறையை தேர்ந்தெடுக்க விரும்பும் மகளிருக்கு சிறந்த ரோல் மாடலாக உள்ளார்.