ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 30 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
இதில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதியாகி இன்று இலங்கையில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதிவருகின்றன. இந்த இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிவருகிறது.
இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் இறங்கிய இலங்கை அணி ஒரு ரன்கள் எடுத்தபோது குசேல் பெரேரா ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி தொடர்ந்து தனது விக்கெட்களை இழந்து தடுமாறிவருகிறது. தற்போதைய நிலவரம் படி ஆறு ஓவர்கள் முடிவுக்கு 13 ரன்களை எடுத்து ஆறு விக்கெட்களை இழந்துள்ளது இலங்கை அணி. ஆசியக் கோப்பையின் நடப்பு சாம்பியன் இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் நான்காவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் மட்டும் இலங்கை அணி தனது நான்கு விக்கெட்களை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.