தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விளையாட்டுத்துறைக்கு கூடுதல் கவனம் கொடுத்து வருகிறது. குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்ற பிறகு அத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையில் இந்த ஆட்சியில் இரு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று செஸ் ஒலிம்பியாட் மற்றொன்று கேலோ இந்தியா.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும். அந்த வகையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் 6வது சீசன் இந்த முறை தமிழ்நாட்டில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் இந்தப் போட்டிகள் நடந்தன.
இதில், கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 26 போட்டிகள் நடைபெற்றது.
சென்னை அல்மாடியில் உள்ள சிவந்தி ஆதித்தன் ஷூட்டிங் ரேஞ்ச் பகுதியில் துப்பாக்கி சுடும் போட்டி நடத்தப்பட்டது. இதில், இரு முறை தேசிய அளவில் சாம்பியனான நிலா ராஜா பாலு எனும் சிறுமி பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதே போட்டியில் அவருடன் அவரது உறவினரும், சகோதரருமான எஸ்.எம். யூகனும் பங்கேற்று அவரும் சாதித்துள்ளார். யூகன் தான், இந்தியாவின் தற்போதைய இளம் டிராப் ஷூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கா, தம்பியான இருவரும் துப்பாக்கிச் சூடு போட்டியில் சாதித்து விளையாட்டுத்துறையில் குடும்பமாக சாதித்துள்ளனர். இவர்கள் இருவரும் வளரும் துப்பாக்கிச் சூடு வீரர்களாகப் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளனர்.
இதில், நிலா ராஜா பாலு தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.