இந்திய வீரர்களை நாம் ஏன் பாராட்டக்கூடாது என தன்னை விமர்சித்தவர்களை நோக்கி அக்தர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்தர் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பிற நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களாயினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போதும், ஏதாவது புதிய சாதனை படைக்கும் போதும் மனம் திறந்து பாராட்டக் கூடியவர். அந்த வகையில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை சில தினங்களுக்கு முன்னால் பாராட்டியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சில கிரிக்கெட் ரசிகர்கள் அக்தரை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து அக்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அக்தர், "விராட் கோலியையோ, பிற இந்திய வீரர்களையோ நான் ஏன் பாராட்டக்கூடாது. பாகிஸ்தானிலோ அல்லது உலக அளவிலோ ஏதாவது வீரர் விராட் கோலியின் சாதனையை சமகாலத்தில் நெருங்கி இருக்கிறார்களா, என்னை எதற்காக விமர்சிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் திறமை மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் புள்ளி விவரங்களை எடுத்து பாருங்கள். விராட் கோலி இதுவரை 70 சதம் அடித்திருக்கிறார். இந்தியாவிற்காக பல தொடர்களை வென்று கொடுத்திருக்கிறார். அவரும் ரோஹித் ஷர்மாவும் சிறந்த வீரர்கள், அவர்களைப் பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது" என்றார்.
தோனி ஓய்வு முடிவை அறிவித்தபோது பிசிசிஐ மீது அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி தோனிக்கு ஆதரவாக கருத்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.