மகளிர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் 16 வயது ஷஃபாலி வர்மா, ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த ஷஃபாலி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். அதிரடியான வலதுகை ஆட்டக்காரராக ஷஃபாலி, அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் இந்திய அணியின் மிகமுக்கிய வீராங்கனையாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 2018 முதல் மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸை பின்னுக்குத்தள்ளி ஷஃபாலி தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதாக மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக ஷஃபாலியின் பேட்டிங்கும் கூறப்படுகிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஷஃபாலி 161 ரன்கள் குவித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.