13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பின் நடைபெற இருப்பதால் இத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இரு அணி வீரர்களும் வெற்றி முனைப்போடு தீவிர பயிற்சியில் உள்ளனர். சென்னை அணியின் முக்கிய வீரரான ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ரெய்னா இடத்தில் யாரை இறக்குவது என்று முடிவு செய்யமுடியாமல் சென்னை அணி இருந்து வருகிறது. இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் வெகுசில நாட்களே இருப்பதால் சென்னை அணி இறுதி முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. நியூசிலாந்து அணியின் மூத்த வீரரான ஸ்டைரிஸ் இது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர், "ரெய்னா இல்லாதது அணிக்கு நிச்சயம் பெரும் பின்னடைவுதான். ராயுடு மூன்றாவது இடத்தில் விளையாட சிறந்த தேர்வாக இருப்பார். எனவே அவரை அந்த இடத்திற்கு தேர்வு செய்யலாம். நீண்ட நாள் விளையாடிய ஒரு சிறந்த வீரர் ரெய்னா. அவரது இடத்தை உடனே நிரப்புவது கடினம். சென்னை அணிக்கு இது பெரும் சவாலாக இருக்கப்போகிறது" என்றார்.
ரெய்னாவின் இடத்திற்கு முரளி விஜய் பொருத்தமாக இருப்பார் என்று சில தினங்களுக்கு முன்னால் சென்னை அணி வீரர் வாட்சன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.