கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 35,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதியுதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் கடந்த வாரம் நாங்கள் ஒரு குழுவாக இணைந்தோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இதுவரை உணவு வழங்கியுள்ளோம். மேலும், கடந்த ஒரு வாரத்தில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 1.25 கோடி நிதி திரட்டியுள்ளோம். அந்தத் தொகை 1 லட்சம் பேருக்கு உதவியாக இருக்கும். இந்தச் சேவை தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.