அது 2001-ஆம் ஆண்டு துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்கள் மோதிய போட்டி. கிரிக்கெட்டின் கடவுள் மேற்கு மண்டலம் அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். ட்ரிங்க்ஸ் டைமிங்கின்போது 19 வயது இளைஞன் கிழக்கு மண்டல அணிக்காக ட்ரிங்க்ஸ் எடுத்து சென்றபோது, சச்சினும் ட்ரிங்க்ஸ் தருமாறு அந்த இளைஞனிடம் கேட்கிறார். அப்போது தான் மிக அருகில் சச்சினை முதன் முதலில் சந்திக்கும் வாய்ப்பு அந்த இளைஞனுக்கு கிடைத்தது.
பிறகு 7 ஆண்டுகள் கழித்து அதே இளைஞனை இந்திய அணிக்கு தலைமை தாங்க சிபாரிசு செய்கிறார் சச்சின். அனைவருக்கும் ஆச்சரியமே மிஞ்சியது. ஏனென்றால், அந்த இளைஞன் இந்திய அணிக்கு 3 ஆண்டுகள் மட்டுமே விளையாடி இருந்தான். மேலும், அந்த இளைஞனுக்கு கேப்டன்ஷிப் அனுபவம் கிடையாது. ரஞ்சி டிராபிகளில் கூட கேப்டனாக இருந்தது இல்லை.
சச்சின் அந்த இளைஞனான தோனியை பரிந்துரைக்க சில காரணங்கள் இருந்தன. 2004-2007 காலகட்டங்களில் தோனியை பற்றி நன்கு அறிந்திருந்தார் சச்சின். தோனியின் நேர்மை, குறுகிய காலத்தில் அணியின் பலம் & பலவீனங்களை அறிந்திருந்த தோனியின் ஸ்கில்ஸ், பொறுமை, எதையும் கூலாக டீல் செய்யும் விதம், உறுதியாக தெரிந்தால் சச்சினின் கருத்துடன் முரண்படும் தோனியின் துணிச்சல் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் விதம் ஆகியவை சச்சினை வெகுவாக ஈர்த்தன.
குறுகிய காலத்தில் தோனியின் விசித்திர திறமைகளை அறிந்திருந்த சச்சினின் அன்றைய சாய்ஸ், கிரிக்கெட் உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த அடித்தளமிட்டது. தோனி இவ்வளவு உயரங்களை எட்டுவார் என அன்று சச்சினே நினைத்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.
பேட்ஸ்மேன்களின் வழக்கத்திற்கு மாறான பேட்டிங் ஸ்டைல் கொண்டதன் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்படாத தோனி, பிற்காலத்தில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உருவெடுத்தது, இன்றைய பல இளைஞர்களுக்கு உத்வேகத்தை தரக்கூடிய ஒன்று.
ஒரு காலத்தில் உள்ளூர் போட்டிகளில் அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் ரூ.50-ஐ பயிற்சியாளர் தோனிக்கு பரிசாக வழங்குவார். இன்று ஒரு மாநிலத்தின் அதிக வரி கட்டுபவர்கள் லிஸ்டில் டாப் பொசிசனில் இருக்குமளவிற்கு வளர்ந்துள்ளார்.
வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு தன் கிரிக்கெட் வாழ்க்கையின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். தன்னை பரிந்துரைத்தவரின் கனவு கோப்பையை வாங்கித்தந்து தன்னுடைய நன்றியை காட்டியுள்ளார்.