ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதியின் மூன்றாவது போட்டியில் மொராக்கோ - போர்ச்சுக்கல் அணிகள் விளையாடின.
காலிறுதியில் மொராக்கோ வெற்றி பெற்றால் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெறும். போர்ச்சுக்கல் வென்றால் நான்கு முறை இயலாமல் ஐந்தாவது முறையாக தொடரும் ரொனால்டோவின் உலகக்கோப்பைக்கான கனவு தொடர்ந்திருக்கும். இதுவே இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் எகிற வைத்தது.
கடந்த போட்டியைப் போலவே ரொனால்டோ தொடக்க லெவனில் களமிறக்கப்படவில்லை. மொராக்கோ அணியின் தடுப்பாட்டம் வலிமை பெற்றபின் அந்த அணி அட்டாக் செய்ய முன்னேறினர். இதனால் போர்ச்சுக்கல் அணி தடுமாற மொரக்கோ அணி 42 ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது. தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதியில் ரொனால்டோ களமிறக்கப்பட்டார். எனினும் மொராக்கோ அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இரண்டாம் பாதியும் முடிவுக்கு வர இரு அணிகளும் எந்த கோல்களையும் அடிக்கவில்லை. இதனால் மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
37 வயதாகும் ரொனால்டோ அடுத்த உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்பதால் களத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.