உலகக் கோப்பை 2023ல் பங்குபெறும் அணிகள் செப்டம்பர் 5க்குள் முதற்கட்ட 15 வீரர்களை அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) காலக்கெடு வைத்திருந்தது. கடைசி நாளான இன்று (05-09-2023) உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட இந்திய அணி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பிசிசியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இருவரும் இணைந்து இலங்கை, கண்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வீரர்களின் பெயரை அறிவித்தனர். அதில், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டியா (துணைக் கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், சர்துல் தாகூர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் போது பொதுமக்களின் பார்வை எப்படி இருந்தது என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த ரோகித் சர்மா, “நான் பலமுறை கூறி விட்டேன். இதுபோன்ற கேள்விகளை இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை செய்தியாளர் சந்திப்பில் என்னிடம் கேட்காதீர்கள். நான் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன். இதுபற்றி எல்லாம் பேசுவதில் எந்த அர்த்தமுமில்லை. எங்களின் கவனம் முற்றிலும் வேறு ஒன்றாக இருக்கிறது, இவற்றைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை” என கோபத்துடன் பதிலளித்தார்.
இதையடுத்து, இந்திய அணியை பற்றி ரோகித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "எங்களால் இயன்ற சிறந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளோம். மேலும் நாங்கள் ஆழமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய பேட்டிங்கை வைத்துள்ளோம். அதேபோல சுழற்பந்து, பிற பந்துவீச்சு வகைகளிலும் கூடுதல் வழிகளை வைத்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா ஒரு முழுமையான ஆட்டக்காரர் என்பதால் அவரது தற்போதைய ஃபார்ம் உலகக் கோப்பையில் எங்களுக்கு மிகமுக்கியமானதாக இருக்கும்" என அவர் பேசினார். ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்த பதில் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.