இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
ரோஹித் ஷர்மாவும், ராகுலும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த நிலையில் ரோஹித் ஷர்மா இன்று ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது 26 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் இது அவரது நான்காவது சதம் ஆகும். மேலும் இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும் ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் உள்ளார். அவர் மொத்தமாக 6 சதங்கள் அடித்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் சங்ககாரா, ரிக்கி பாண்டிங், ரோஹித் ஷர்மா ஆகியோர் தலா 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளனர்.
இன்றைய போட்டியில் சதமடித்தது மூலம், குறைவான உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இவர் வெறும் 15 இன்னிங்ஸ்கள் விளையாடி அதில் 5 சதங்களை அடித்துள்ளார். ரோஹித் ஷர்மாவின் இந்த சாதனைகளை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.