இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டனாக ரோகித் சர்மா அண்மையில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில், அவர் இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலக நேரிட்டது.
இந்தநிலையில் அடுத்து நடைபெறவுள்ள மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது போட்டி தொடரில் ரோகித் சர்மா, இந்திய அணிக்கு திரும்பவுள்ளார். ரோகித் சர்மா, இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்படவுள்ள முதல் தொடராக மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் அமையவுள்ளது. இந்தநிலையில் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் அற்புதமான ஜோடி என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
பேக்ஸ்டேஜ் வித் போரியா நிகழ்ச்சியில் சச்சின் கூறியுள்ளதாவது;
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகக் கோப்பையை வென்று 11 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. நான் உட்பட அனைவரும் அந்த கோப்பையை பிசிசிஐயின் அலுவலகத்தில் பார்க்க விரும்புகிறோம். அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இந்த கோப்பைக்காக விளையாடுவார்கள். உலகக்கோப்பையை விட பெரிதானது ஒன்றுமில்லை. இருபது ஓவராக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டிகளாக இருந்தாலும் சரி உலகக் கோப்பை வெற்றி என்பது ஒரு சிறப்பு வாய்ந்தது. அப்படித்தான் நான் உணருகிறேன்.
ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான ஜோடி. இவர்கள் இருவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இருவருக்கும் பலரின் (வீரர்கள்) ஆதரவு இருக்கிறது. சரியான நேரத்தில் அந்த ஆதரவை பெறுவதுதான் முக்கியம். நிச்சயமாக, அனைவரும் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள். பாதையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். நம்பிக்கையை இழக்காமல் இருப்பது முக்கியமான ஒன்று. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், தொடர்ந்து முன்னேறுவோம் இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.