மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால், அணிகளை ஏ,பி என இரண்டு குழுக்களாகப் பிரித்து லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏ குழுவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், பி குழுவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் பத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன. இதில் சென்னை அணி நிர்வாகம் பல முன்னணி வீரர்களையும் இளம் வீரர்களையும் ஏலத்தில் எடுத்து. ஆனாலும் ஃபாப், ரெய்னா, ஷார்துல் உள்ளிட்ட வீரர்களைச் சென்னை அணி ஏலத்தில் எடுக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. குறிப்பாக மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் ரைனாவை எந்த அணியும் எடுக்கவில்லை. இது சென்னை ரசிகர்களுக்கு மட்டுமின்றி ரெய்னா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க உள்ளார் ரெய்னா.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடிவந்த ரெய்னா, தனது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கால் ரசிகர்களை ஈர்த்துவந்த நிலையில், தற்போது அவர் வர்ணனையாளராகச் செயல்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 26 அன்று தொடங்கும் இவ்வாண்டுக்கான தொடரில் ரெய்னாவும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இந்தி வர்ணனை செய்ய உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. ஏலத்திற்குப் பிறகு பல்வேறு காரணங்களால் பல அணிகளிலிருந்து வீரர்கள் விலகி வருவதால் மாற்றுவீரராக ரெய்னா மீண்டும் விளையாட வருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, தற்போது அவர் வர்ணனை செய்ய உள்ளார் என்ற செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, வீரராக இருந்துவந்த ரெய்னா, வர்ணனையாளராக எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது.