Skip to main content

ஒன்பதாவது வருடமாக தொடரும் சாதனை; கலக்கும் இந்திய அணி!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Record continues for ninth consecutive year; A mixed Indian team

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29, ஜோ ரூட் 24 என ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார். ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். படிக்கல் 65 ரன்களிலும், சர்பிராஸ் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா மற்றும் ஜுரேல் ஆகியோர் 15 ரன்களில் வெளியேறினர். கடைசியாக குல்தீப் 30, பும்ரா 20 ரன்கள் சிறப்பாக ஆட இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.  36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். ரூட் மட்டும் அரைசதம் கடந்து 84 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே வார்னே, கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் உள்ளனர். மேலும் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை (36 முறை) பிடித்துள்ளார். கும்ப்ளே 35 இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ரா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை எடுத்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசி, பேட்டிங்கிலும் ஜொலித்த குல்தீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 2015 முதல் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது வருடமாக டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

வெ.அருண்குமார்