இந்தி மொழி இந்தியர்களின் தாய்மொழி. எனவே அனைவரும் இந்தியில் பேச வேண்டும் என கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக- பரோடா அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக்கோப்பை போட்டியின் போது, பேசிய ஒரு வர்ணனையாளர், அவருக்கு கவாஸ்கர் இந்தியில் வர்ணனை செய்வது மிகவும் பிடிக்கும் என்றும், அவர் நிறைய இடங்களில் மிகச்சரியான இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவார் எனவும் கூறினார்.
அதற்கு பதிலளித்த மற்றொரு வர்ணனையாளர், "ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது நம் தாய் மொழி. இந்திக்கு மேல் உயர்வான மொழி வேறு எதுவும் இல்லை. சிலர் என்னிடம், கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்தியை எப்போதும் பேசுகிறார்கள்? என கேட்கிறார்கள். இதனால் எனக்கு சில பேர் மீது எரிச்சல் உண்டு. இந்தியாவில வசிக்கும் நாம் இந்தியை பேசாமல் வேறு எதை பேசுவது, அதுதானே நம் தாய் மொழி" என தெரிவித்தார்
அவர்கள் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் அவர்களுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. மேலும், இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இரண்டு வர்ணனையாளர்களில் ஒருவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.