16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சாம்சன் 30 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியில் ரஷித் கான் 3 விக்கெட்களையும் நூர் அகமது 2 விக்கெட்களையும் ஷமி, பாண்டியா, ஜோஷ்வா லிட்டில் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். 119 ரன்கள் என்ற எளிய இலக்கை கொண்டு ஆடிய குஜராத் அணி 13.5 ஓவர்களின் 1 விக்கெட்டை இழந்து 119 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஹா 41 ரன்களையும், பாண்டியா 39 ரன்களையும், கில் 26 ரன்களையும் எடுத்தனர்.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி ஜெய்ப்பூரில் தன்னுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 6 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்ததே குறைந்தபட்சமாக இருந்தது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி முதல் 5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 47 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 6 முதல் 18 ஓவர்களில் 71 ரன்களை எடுத்து 9 விக்கெட்களை இழந்தது.
இன்றைய போட்டியில் குஜராத் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி ஜெய்ப்பூரில் ஹோம் கிரவுண்டில் 3 முறை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் ஒரு முறை 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்த அணியானது. மேலும் இன்றைய போட்டியில் குஜராத் அணி 37 பந்துகளை மீதம் வைத்து ராஜஸ்தானை வென்றது. இதற்கு முன் கொல்கத்தா அணி 2019 ஆம் ஆண்டு 37 பந்துகள் மீதம் வைத்து ராஜஸ்தான் அணியை வென்றிருந்தது.